சவுதி அரேபியாவில்  பெண் துணை அமைச்சர் நியமனம்!

Thursday, March 1st, 2018

சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக முதல் முறையாக துணை அமைச்சர் பதவியில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவுதி அரேபியாவில் பல அதிரடி சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்டுவதற்கும், தொழில் ஆரம்பிப்பதற்கும், கால்பந்து போட்டிகளை கண்டுகளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், இலஞ்ச ஊழலில் ஈடுபட்ட இளவரசர்கள், அமைச்சர்கள், கோடீஸ்வரர்கள் என 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து, அவர்களை ரியாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் சிறை வைத்தனர்.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் இராணுவ தளபதிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இராணுவம், விமானபடை தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் துணை அமைச்சராக பெண் ஒருவரையும் மன்னர் சல்மான் நியமித்துள்ளார். சமூக முன்னேற்றம் மற்றும் தொழிலாளர் நலத்துறை துணை அமைச்சராக டாக்டர் தாமாதர் பின் யூசுப் அல்-ரம்மா என்ற பெண்ணே நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபோன்ற முக்கிய துறையில் பெண் ஒருவர் துணை அமைச்சராக நியமிக்கப்படுவது அந்த நாட்டில் இதுவே முதல் முறையாகும். இவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ரோடியோலஜி மற்றும் மருத்துவ பொறியியல் துறையில் பி.ஹெச்.டி. படித்தவர் எனவும் 2016ல் சவுதி அரேபியாவின் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: