சதாம் ஹுசைனுக்கு நேர்ந்த கதி ட்ரம்ப்புக்கும் நேரலாம் – ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை!

Sunday, December 27th, 2020

சதாம் ஹுசைனுக்கு நேர்ந்த கதி ட்ரம்ப்புக்கும் நேரலாம் என்று ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி,  “எங்களது அண்மைய வரலாற்றில் நாங்கள் இருவிதமான மோசமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறோம். ஒருவர் ட்ரம்ப், மற்றொருவர் சதாம்.

சதாம் எங்களுடன் போரில் ஈடுபட்டார். ட்ரம்ப் எங்களுடன் பொருளாதாரப் போரில் ஈடுபட்டார். இரண்டிலும் ஈரான் வெற்றி பெற்றுவிட்டது. சதாம் அவரது குற்றத்திற்குத் தண்டனை பெற்றுவிட்டார். ட்ரம்ப்பின் விதியும் சிறப்பாக இருக்கப் போவதில்லை. சதாமுக்கு நேர்ந்த கதி ட்ரம்ப்புக்கும் நேரலாம்“ எனத் தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சியை நடத்துகிறார் எனவும், ஷியா முஸ்லிம்களைக் கொலை செய்கின்றார் என்றும் 2003 ஆம் ஆண்டு சதாமின் ஆட்சியை அமெரிக்கா கவிழ்த்தது. இதனைத் தொடர்ந்து சதாம் தலைமறைவானார். அமெரிக்கப் படையால் இறுதியில் பிடிக்கப்பட்ட ஹுசைன், 2006ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் தனது நான்கு வருட ஆட்சிக் காலத்தில் ஈரானுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார். ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிய பின்பு, அந்நாட்டின் மீது தொடர்ச்சியாகப் பொருளாதாரத் தடைகளை ட்ரம்ப் விதித்து வந்தார்.

மேலும், ஈரானின் முக்கிய ராணுவத் தளபதியான காசிம் சுலைமானை அமெரிக்கப் படைகளை வைத்து ட்ரம்ப் கொலை செய்தார். இதன் காரணமாக ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் வலுத்தது.

இந்நிலையில் அண்மையில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். 2021-ம் ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் எந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் தங்கள் நிலைப்பாடு ஒரே மாதிரியாக இருக்கும் எனவும் அமெரிக்கா தங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் எனவும் ஈரான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: