கொலம்பியாவில் ஆர்ப்பாட்டத்தின்போது மோதல்!

Monday, May 22nd, 2017

கொலம்பியாவின் புவனவென்டூரா (Buenaventura) எனும் நகரில், சமூக முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மோதலில் நிறைவுற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் படுகாயமடைந்துள்ளதாக அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், மோதலில் ஏற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் 41 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் ஆரம்பத்தில் இந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையிலேயே நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை மற்றும் வறுமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறித்த நகரில் சமூக முன்னேற்றத்தின் பொருட்டு புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்நகரில் உள்ள மக்கள் பல நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

குறித்த நகரில் சுமார் 415,000 பேர் குடிநீர் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் இன்றி அவதியுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: