குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் வீடு திரும்பினர்!

Friday, July 20th, 2018

தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்பினர்.
குகைக்குள் இருந்து காப்பாற்றப்பட்டது, ஓர் அதிசயமான சம்பவம் என்று அவர்கள் பிரமிப்புடன் கூறினர்.
தாய்லாந்தின் சியாங் ராய் என்னும் பகுதியிலுள்ள குகையைப் பார்வையிட, வைல்டு போர்ஸ்’ என்னும் உள்ளூர் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களை, அவர்களின் பயிற்சியாளர் கடந்த மாதம் 23-ஆம் திகதி அழைத்துச் சென்றார்.
அப்போது, திடீரென பெய்த பெருமழை காரணமாக அந்த குகைக்குள் வெள்ளம் புகுந்ததையடுத்து, அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். 9 நாள்களுக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடத்தை சர்வதேச மீட்புக் குழுவினர் கண்டறிந்தனர்.
9 நாள்கள் வரை, உணவின்றி தவித்த அவர்கள், குகைக்குள் புகுந்த வெள்ள நீரைக் குடித்து உயிர் வாழ்ந்தனர். இதனால், அவர்களின் உடல் மிகவும் மெலிந்து விட்டது. ஒரு வழியாக, 17 நாள்களுக்குப் பிறகு, அவர்களை சர்வதேச மீட்புக் குழுவினர், கடந்த 10-ஆம் திகதி பத்திரமாக மீட்டனர்.
பின்னர், அவர்கள் அனைவரும் சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வாரமாக, மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த அவர்கள், புதன்கிழமை வீடு திரும்பினர். அவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவர்களை உறவினர்களும், பொதுமக்களும் சூழ்ந்து கொண்டு வரவேற்றனர்.
குகையில் இருந்து மீட்கப்பட்ட அனுபவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். ஏற்கெனவே, அதிர்ச்சியூட்டக் கூடிய, தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்குமாறு செய்தியாளர்களை தாய்லாந்து ராணுவத் தளபதி எச்சரித்திருந்தார்.
அதன்படி, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அந்தச் சிறுவர்கள் பொறுமையாகப் பதிலளித்தனர். அப்போது, குகையில் இருந்து உயிர் பிழைத்து வந்தது, அதிசயமான சம்பவம் என்று அதுல் சாம்-ஆன் என்ற சிறுவன் கூறினார். இது, தனது வாழ்வில் மகிழ்ச்சியான நாள் என்று மீட்கப்பட்ட டாம் என்ற சிறுவனின் பாட்டி கூறினார்.

Related posts: