காவிரிப் பேச்சு தோல்வி: தமிழகம், கர்நாடகம் இடையே தொடரும் முரண்பாடு!

Friday, September 30th, 2016

காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில அரசுகளுக்கிடையே மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வியாழக்கிழமை டெல்லியில், நான்கு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இரு மாநிலங்களிலும் உள்ள தண்ணீர் இருப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று கர்நாடக மாநிலத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்த யோசனையை தமிழகம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், இந்தப் பிரச்சனையில் எந்த உடன்பாட்டையும் எட்ட முடியவில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அமைச்சர் உமாபாரதி, இரு மாநிலங்களிலும் அமைதியை ஏற்படுத்த தேவைப்பட்டால் உண்ணாவிரதம் இருக்கவும் தயார் என்று தெரிவித்தார்.

நமது தேவைக்கு குறைவாக பயன்படுத்திக் கொண்டு, மற்றவர்களுக்கு அதிகமாகக் கொடுப்பதுதான் நமது கலாசாரம் என்று தெரிவித்த உமாபாரதி, அந்த அடிப்படையில் காவிரி பிரச்சனைக்கும் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இரு மாநிலங்களும் மற்றவற்றின் மீது பரிவு காட்டி இப் பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு காண முயல வேண்டும் என்று கூட்டத்தில் உமாபாரதி வேண்டுகோள் விடுத்தார்.இரு மாநில பிரதிநிதிகளும் கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கள் மத்திய அரசு வழக்கறிஞர் மூலம் உச்சநீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

செவ்வாயக்கிழமையன்று, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி, இரு மாநில முதலமைச்சர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அதிகாரிகளும், தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலர் ராம் மோகன் ராவ் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

_91450547_uma

Related posts: