கிரீஸ் ரயில் விபத்து – நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர் – ஏதென்ஸில் வன்முறையில் ஈடுபட்ட மக்கள்!

Monday, March 6th, 2023

கிரீஸ் நாட்டின் ஏதென்ஸில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை 350 பயணிகளுடன் ரயில் சென்றது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்றபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது. இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதியதில் பயணிகள் ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து தீ பற்றி எரிந்தன. அப்போது 3 பெட்டிகள் வெடித்தன. இந்தக் கோர விபத்தில் 57 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.

இந்நிலையில், கிரீஸ் ரயில் விபத்தில் பலியானோருக்காக அந்நாட்டு பிரதமர் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தொடர்பாக, பிரதமர் மிஸ்டோடாகிஸ் வெளியிட்டுள்ள பேஸ்புக் செய்தியில், அனைவருக்கும், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தனிப்பட்ட முறையில் மற்றும் பல ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த அனைவரின் சார்பாகவும் மன்னிப்புக் கோருகிறேன். இது துயரமான மனிதத் தவறு ஆகும் என பதிவிட்டுள்ளார்.

இதனிடையே இந்த விபத்து வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சந்தேகித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக ரயில் நிலைய அதிபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ரயிலை சிவப்பு சிக்னலை கடந்து செல்லக் கூறியதாக ஓடியோ பதிவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக  ரயில் நிலைய அதிபரை விளக்கம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த விபத்துக்கு ரயில்வே அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று கூறி ஏராளமானோர் பேரணியாகச் சென்றனர். கிரீஸில் தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஏதென்ஸில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியில் திடீரென சிலர் பொலிஸார் மீது கற்களை வீசினர். இதையடுத்து, பொலிஸார் கண்ணீர் புகைகுண்டுகளை போராட்டக்காரர்கள் வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: