காவிரி விவகாரம்: தமிழக, கர்நாடக அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
 Saturday, September 17th, 2016
        
                    Saturday, September 17th, 2016
            
காவிரியில் விவகாரம் தொடர்பில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் நடந்த வன்முறை குறித்து, இரு மாநில அரசுகளிடமும் விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தொலைக்காட்சிகளில் வெளியான வன்முறைக் காட்சிகளைப் பார்க்கும்போது, கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள போலீஸ் மற்றும் சிவில் அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, சட்டவிரோத, வன்முறைச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும், மக்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்க, முன்னதாகவே திட்டமிட்டு செயல்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்று மனித உரிமை ஆணையம் கடுமையாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
காவிரி நீர் பங்கீடு பிரச்சினை, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கிடையே மிகவும் உணர்வுப்பூர்வமான பிரச்சனை என்று தெரிந்திருந்த நிலையிலும், மோசமான சூழ்நிலை ஏற்படலாம் என்று கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். தனி நபர்கள் மீது நடந்த தாக்குதல்கள் மற்றும் தனியார் மற்றும் பொதுச் சொத்துக்கள் பெருமளவில் அழிக்கப்பட்ட பிறகுதான். போலீஸ் மற்றும் சிவில் அதிகாரிகள் விழித்துக் கொண்டார்கள் என மனித உரி உரிமை ஆணையம் கண்டித்துள்ளது.
வன்முறை நடந்த பிறகு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வதும், பிற அவசரப் பணிகள் தொடர்பான தேவைகளுக்கு அணுகுவதும் மூன்று நாட்களுக்குத் தடுக்கப்பட்டது என மனித உரிமை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
போலீஸ் மற்றும் சிவில் அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால், மக்களின் பாதுகாப்பு தொடர்பான மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகக் கூறி, ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், வன்முறையின்போது, காயமடைந்தவர்கள் பற்றிய விவரம், சேதப்படுத்தப்பட்ட தனியார் மற்றும் பொதுச் சொத்துக்கள் பற்றிய விவரங்களை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கர்நாடகம் மற்றும் தமிழக அரசுகளுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        