காவிரி பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர் தலைமையில் டெல்லியில் தமிழக, கர்நாடக முதலமைச்சர்கள் கூட்டம்!

Wednesday, September 28th, 2016

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, காவிரிப் பிரச்சனை குறித்து விவாதிக்க நாளை டெல்லியில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.

வியாழக்கிழை முற்பகல் 11.30 மணிக்கு, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.இதுதொடர்பாக, மத்திய நீர்வளத்துறைச் செயலர் சசிசேகர், இரு மாநில தலைமைச் செயலர்களுக்கும் செவ்வாய்க்கிழமை இரவு கடிதம் அனுப்பியுள்ளார்.

காவிரி நீர் பங்கீடு பிரச்சனை குறித்து விவாதிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி, மத்திய நீர்வளத்துறை, ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை நதி மறுசீரமைப்புத்துறை அமைச்சர், கர்நாடக மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். செப்டம்பர் 29-ம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு, நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று சசிசேகர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டம் தொடர்பாக, முதலமைச்சருக்குத் தகவல் தெரிவித்து, உச்சநீதிமன்ற உத்தரவின்படி அதில் கலந்துகொள்ளுமாறு தகவல் தெரிவிக்குமாறும், அவருடன் நீர்வளத்துறை அமைச்சர், தலைமைச் செயலர் மற்றும் மாநில நீர்வளத்துறைச் செயலர் ஆகியோரும் கலந்துகொள்ளுமாறும் அந்தக் கடிததத்தில் நீர்வளத்துறைச் செயலர் குறிப்பிட்டிருக்கிறார்.

உச்சநீதிமன்றம் கண்டிப்பு

செவ்வாய்க்கிழமையன்று, காவிரி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கர்நாடக அரசு கடந்த 20-ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏன் அமல்படுத்தவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது சட்ட விதிகளுக்கு முரணானது என்று எச்சரித்த நீதிபதிகள், இதுகுறித்து உங்கள் முதலமைச்சரிடம் சொல்லுங்கள் என கர்நாடக தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், அடுத்த மூன்று நாட்களுக்கு கர்நாடக அரசு தமிழகத்துக்கு தினசரி 6 ஆயிரம் கனஅடி தண்ணீரை கண்டிப்பாகத் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டனர்.அதே நேரத்தில், இந்தப் பிரச்சனை குறித்து இரு மாநில முதலமைச்சர்களை இரண்டு நாட்களில் அழைத்து மத்திய அரசு பேச வேண்டும் என்று மத்திய அரசின் வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில்தான், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதே நேரத்தில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, நீதிமன்ற உத்தரவு தொடர்பாக அதிகாரிகளுடன் உடனடி ஆலோசனை நடத்தினார்.டெல்லியில் நடைபெற உள்ள கூட்டத்தில் தன்னால் பங்கேற்க இயலாத நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சர், தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் அதில் கலந்துகொள்ளுமாறு உத்தரவிட்டுள்ள முதலமைச்சர், அதில் தமிழகம் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு குறித்தும் விவரித்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

_91401608_45aa8a35-965b-4ed8-9ed9-e8570e0f1bdf

Related posts: