காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலில் இருந்து காளை நீக்கம்!

Sunday, January 22nd, 2017

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் அவசர சட்டத்தை தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை பிறப்பித்தார்.இதன்மூலம், காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலில் இருந்து காளை நீக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நாளை ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.

தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை சென்னைக்கு சென்று அவசரச் சட்டத்தை பிறப்பித்ததன் மூலம், ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மூன்று வருடங்களின் பின்னர், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வாடி வாசல் நாளை திறக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அத்துடன், ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டம் 6 மாத காலத்திற்கு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை மதுரைக்கு புறப்பட்டுச் சென்றதுடன், நாளை காலை 10 மணியளவில் ஜல்லிக்கட்டை ஆரம்பித்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் நாளை காலை ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஜல்லிக்கட்டு அவசரச்சட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறு, குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியிடம், அதிமுகவின் மக்களவை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, ராஷ்ட்ரபதி பவனில் அதிமுக மக்களவை உறுப்பினர்கள் சந்தித்தனர்.இதேவேளை, தடையை மீறி மதுரை மற்றும் திருச்சியில் இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மதுரையில் தற்காலிகமாக வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ஜல்லிக்கட்டு மீதான தடை முழுமையாக நீக்கப்பட வேண்டுமென வலிறுத்தும் பேரெழுச்சிப் போராட்டங்கள் தமிழகத்தில் தொடர்கின்றன.

சென்னை மெரினா கடற்கரையில் பல இலட்சக்கணக்கானோர் ஐந்தாவது நாளாகவும் திரண்டுள்ளனர்.தமிழகத்தில் இடம்பெற்றுவரும் போராட்டங்களுக்கு ஆதரவளித்து, கொழும்பு, யாழ்ப்பாணம், கல்முனை ஆகிய பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

TamilDailyNews_7608257532120

Related posts: