கடவுள் எனக்கு வழங்கும் காலத்தில் நாட்டின் அரசியல் கொள்கைகளை நிலைநாட்டுவேன் – பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தெரிவிப்பு!

Saturday, September 10th, 2022

தமது தாயாரான மறைந்த மகாராணி எலிசபெத் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக ‘விசுவாசம், மரியாதை மற்றும் அன்புடன்’ சேவை செய்ததாக பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது எலிசபெத் காலமானதை அடுத்து மன்னராக நியமிக்கப்பட்ட சார்ல்ஸ், முதன்முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் நீண்ட காலம் ஆட்சி செய்தவரும் 70 ஆண்டுகளாக உலக அரங்கில் தலைசிறந்து விளங்கியவருமான எலிசபெத், கடந்த வியாழன் அன்று ஸ்கொட்லாந்தில், தனது 96 ஆவது வயதில் காலமானார்.

இந்தநிலையில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா, கனடா, ஜமைக்கா, நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா உள்ளிட்ட 14 நாடுகளின் தலைவரான சார்ல்ஸ், தமது உரையில் ‘ஆழ்ந்த துக்க உணர்வுகளுடன் இன்று உங்களிடம் பேசுகிறேன்’ என்று குறிப்பிட்டார்.

‘என் அன்புக்குரிய தாய் – எனக்கும் எனது குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரு உத்வேகமாகவும் முன்மாதிரியாகவும் இருந்தார். மேலும் எந்தவொரு குடும்பமும் தங்கள் தாய்க்கு செலுத்த வேண்டிய இதயப்பூர்வமான கடனை நாங்கள் அவருக்குக் கடமைப்பட்டுள்ளோம்’ என்று சார்ல்ஸ் தெரிவித்தார்.

‘மகாராணி அசைக்க முடியாத பக்தியுடன் செயற்பட்டமையை போன்று நானும் இப்போது கடவுள் எனக்குக் கொடுக்கும் எஞ்சிய காலம் முழுவதும் நமது தேசத்தின் அரசியலமைப்புக் கொள்கைகளை நிலைநிறுத்த உறுதியளிக்கிறேன். என்று சார்ல்ஸ் குறிப்பிட்டார்.

‘என் வாழ்நாள் முழுவதும் நான் உங்களுக்கு விசுவாசம் மரியாதை மற்றும் அன்புடன் சேவை செய்ய முயற்சிப்பேன்.’ என்றும் அவர் தமது உரையில் தெரிவித்தார்.

இதற்கிடையில் தனது மூத்த மகன் வில்லியமை புதிய இளவரசராக நியமித்துள்ளதாகவும் சார்ல்ஸ் இதன்போது அறிவித்தார். இதன்படி வில்லியமின் மனைவி கேட் இளவரசியாகிறார்.

இந்த பாத்திரத்தில் கடைசியாக மறைந்த இளவரசி டயானா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று சனிக்கிழமையன்று செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் நடைபெறும் நிகழ்வில் சார்ல்ஸ் அதிகாரப்பூர்வமாக மன்னராக அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: