கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பில் இந்தியா சீனாவுக்கு விலக்கு இல்லை!

Thursday, June 28th, 2018

அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது (2015ஆம் ஆண்டு) வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடன் ஈரான் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்டது.
முழுமையான கூட்டு செயல் திட்டம் என்ற பெயரிலான இந்த ஒப்பந்தம் 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் திகதி அமுலுக்கு வந்தது.
இந்த ஒப்பந்தத்தில் ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை கைவிட வேண்டும். குறிப்பாக செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை ஈரான் 15 ஆண்டுகளில் குறைக்க வேண்டும். இதற்கான எந்திரத்தை நிறுவுவதை 10 ஆண்டுகளில் குறைக்க வேண்டும் என்றும் அதற்கு பதிலாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அந்த நாட்டின் மீது விதித்த பொருளாதார தடைகளை திரும்பப்பெறும் என்றும் கூறியது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்த தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார். மேலும் ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் மீண்டும் தொடரும் என்று குறிப்பிட்டார்.
வெளிநாட்டு நிறுவனங்கள் தாங்கள் செய்து வருகிற வணிக செயல்பாடுகளைப் பொறுத்து ஈரானுடனான தொடர்புகளை 3 மாதங்களில் அல்லது 6 மாதங்களில் முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று அமெரிக்கா கூறியது.
‘‘ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் மாதம் 4ஆம் திகதியுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை இந்தியா சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளிடமும் அமெரிக்கா கூறி விட்டதா?’’ என்று வாஷிங்டனில் வைத்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் நிருபர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
‘‘நிச்சயமாக இந்தியா சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சொல்லப்பட்டு விட்டது. இதில் இந்தியா சீனாவுக்கு விலக்கு இல்லை. எல்லா நாடுகளும் படிப்படியாக குறைத்துக்கொண்டு வந்து நவம்பர் 4ஆம் திகதியுடன் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட வேண்டும். இந்தியா மற்றும் சீனாவின் நிறுவனங்கள் மற்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கும்” என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
இந்திய சீன நாடுகள் தங்கள் எரிசக்தி தேவையை கருத்தில் கொண்டு ஈரானிடம் இருந்து பெருமளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கின்றன.
குறிப்பாக இந்தியாவை எடுத்துக்கொண்டால் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் கடந்த ஜனவரி வரையான 10 மாத காலத்தில் ஈரானில் இருந்து 1 கோடியே 84 லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து உள்ளது.
ஈராக் சவுதி அரேபியாவை தொடர்ந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிற 3ஆவது பெரிய நாடாக ஈரான் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளுக்கு அமெரிக்கா கெடு விதித்து இருப்பது பற்றி ஈரான் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில் ‘‘ஈரான் தினந்தோறும் 25 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்கிறது. எனவே குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் உலகச்சந்தையில் இருந்து ஈரானை எளிதாக விலக்கி விடலாம் என நினைத்தால் அது சாத்தியம் இல்லை’என்று குறிப்பிட்டார்.

Related posts: