ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்ட போதை பொருள் ரியோவில் பரபரப்பு!

பொதுவாகவே தென்அமெரிக்க நாடுகளில் போதை மருந்துக் கடத்தலும் அதனைப் பயன்படுத்துபவர்களும் அதிகம். கோகையின் என்ற போதை பொருள் இந்தக் கண்டத்தில் வெகு பிரபலம். பெரு, பொலிவியா, கொலம்பியா நாடுகளில் கோகையின் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இங்கிருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குக் கடத்தப்படுகிறது. போதை மருந்துக் கடத்தல் கும்பல்களுக்கிடையே அடிக்கடி மோதல்களும் நிகழ்வது உண்டு.
தென் அமெரிக்க மக்களிடையே கோகையின் எவ்வளவு பிரபலம் என்பதற்கு கால்பந்தை வைத்து இரு சம்பவங்களை உதாரணமாகக் கூறலாம். கடந்த 1994ம் ஆண்டு அமெரிக்காவில் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி நடந்தது. மரடோனா தனது கால்பந்து வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருந்த காலம். பல்கேரிய அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, அவர் கோகையின் பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக 15 மாத காலம் தடையைச் சந்திக்க நேரிட்டது. அதோடு, அவரது சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளியும் விழுந்தது.
இதே உலகக் கோப்பைத் தொடரில், கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்டது கொலம்பியா. ஆனால் முதல் சுற்றிலேயே மிக மோசமாக விளையாடித் தொடரை விட்டு வெளியேறியது. அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொலம்பியத் தடுப்பாட்ட வீரர், ஆன்ட்ரஸ் எஸ்கோபர் ‘சேம்சைட் ‘ கோல் அடித்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. தாய்நாடு திரும்பிய எஸ்கோபர் போதை மருந்து கடத்தும் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலம்பிய அணிக்காக 51 சர்வதேச போட்டிகளில் விளையாடியிருந்த எஸ்கோபர் அடித்தது ஒரே கோல்தான் அதுவும் ‘சேம்சைட் ‘ கோலாகி அவருக்கே எமனாக மாறி விட்டது.
கோகையின் பிடியில் இருக்கும் தென்அமெரிக்க கண்டத்தில்தான் 31வது ஒலிம்பிக் போட்டியும் நடைபெற போகிறது ஐரோப்பிய நாடுகளைப் போல, பிரேசில் பொருளாதார வலிமை கொண்ட நாடு அல்ல. அரசியல் குழப்பங்களும், பொருளாதார நெருக்கடியும் கொண்ட நாடுதான். ஊழல் புகாருக்குள்ளான பிரேசில் அதிபர் டிலமா ரூசப் அண்மையில் பதவி விலகியுள்ளார். துணை அதிபர் மிச்சேல் டெமர் ஒலிம்பிக் போட்டியைத் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள ரியோ என செல்லமாக அழைக்கப்படும் ரியோடி ஜெனிரோ பிரேசிலின் 2வது மிகப் பெரிய நகரம். சுமார் 70 லட்சம் மக்கள் தொகைக் கொண்டது. தென் அமெரிக்கக் கண்டத்தில் ஒலிம்பிக் போட்டியை நடத்தப் போகும் முதல் நகரம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. உலகின் 207 நாடுகளில் இருந்து 17 ஆயிரம் வீரர் வீராங்கனைகள் அதிகாரிகள், பயிற்சியாளர்கள் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆயத்தமாகி வருகின்றனர்.
சுமார் 25 ஆயிரம் விளையாட்டு பத்திரிகையாளர்கள் உலகம் முழுவதிலுமிருந்து போட்டியை கவரேஜ் செய்ய ரியோ வரவுள்ளனர். 15 லட்சம் சுற்றுலாப்பயணிகள் பிரேசிலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக் கிராமத்தில் 3,604 அடுக்குமாடி குடியிருப்புகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆணுறைகள் கூட லட்சக்கணக்கில் வாங்கி வைத்து ஒரு நாளைக்கு 2 என வழங்க ஒலிம்பிக் போட்டி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இவ்வளவு திட்டமிட்டு, ஒரு லட்சம் கோடிக்கு மேல் செலவிட்டு நடத்தப்படும் ஒரு மதிப்புமிக்க விளையாட்டுப் போட்டியை போதை மருந்து கடத்தும் கும்பல்கள் சர்வசாதாரணமாக அலட்சியப்படுத்தி விடுகின்றன.
தற்போது ரியோ ஒலிம்பிக் போட்டி நெருங்கி வரும் வேளையில், ஒலிம்பிக் சின்னத்தையே கோகையின் பாக்கெட்டுகளில் அச்சடித்து, போதை மருந்து கும்பல் விற்பனை செய்வது பிரேசில் அரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு ஒலிம்பிக் போட்டி வரலாற்றிலும் இப்படி ஒரு அவலம் நிகழ்ந்தது இல்லை. ஆனால் ஒரு நல்ல விஷயத்தை அந்த பாக்கெட்டில் போதை கும்பல் செய்திருக்கிறது. . ‘குழந்தைகளிடம் இருந்து இந்த பாக்கெட்டுகளைத் தள்ளி வையுங்கள்’ என்ற வாசகத்தை மறக்காமல் பாக்கெட் மீது அச்சடித்திருக்கிறது.
ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள மரக்காணா மைதானத்தின் அருகிலேயே ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்ட கோகையின் பாக்கெட்டுகளை ரியோ போலீஸ் பிடித்துள்ளது. கைப்பற்றப்பட்ட 93 பாக்கெட்டுகளிலும் ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்டிருக்கிறது. ரியோ முழுவதும் பரவலாக ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்ட பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படலாம் போலீஸ் சந்தேகிக்கிறது.ஒலிம்பிக் சின்னம் பதிக்கப்பட்ட கோகையின் பாக்கெட்டுகளை பிடிக்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால், கடந்த 1928ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக் போட்டி முதல் தற்போது வரை கோகா கோலா நிறுவனம் தான் ஒலிம்பிக் போட்டிக்கு முக்கிய ஸ்பான்சர். ஒலிம்பிக் சின்னத்தை பயன்படுத்தி கொள்வதற்காக இந்த நிறுவனம் பணத்தைக் கொட்டிக் கொடுக்கிறது. கடந்த 1984ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்கு பிறகு, ஒலிம்பிக் போட்டிக்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
மெக்டோனால்ட், விசா,சாம்சங், ஒமேகா, டொயாட்டா போன்ற ஏராளமான நிறுவனங்கள் தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு துணை ஸ்பான்சர்களாக உள்ளன. சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் வருமானத்தில் 40 சதவீதம் இந்த ஸ்பான்சர்களிடம் இருந்துதான் கிடைக்கிறது. ஆனால் இந்த ஸ்பான்சர் விஷயமெல்லாம் போதைக் கும்பல்களுக்கு தேவை அற்றது.
ஒலிம்பிக் போட்டியின் அடையாளமே அதன் சின்னம்தான். அன்பையும் சமதானத்தையும் வலியுறுத்தியும் 5 கண்டங்களையும் குறிக்கும் வகையில் 5 வளையங்கள் பின்னி பிணைந்திருப்பது போல ஒலிம்பிக் சின்னம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
Related posts:
|
|