ஒரே நாளில் 6,500 பேர் மீட்பு!

Wednesday, August 31st, 2016

லிபியாவின் கரையோரப் பகுதியில் வைத்து, நேற்று அகதிகளில் 6,500 பேர் மீட்கப்பட்டுள்ளார். அண்மைய ஆண்டுகளில், ஒரே நாளில் அதிகம் பேர் மீட்கப்பட்ட நாளாக, திங்கட்கிழமை அமைந்துள்ளது.

இத்தாலியின் கரையோரக் காவற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே, இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக, எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்புச் செயற்பட்டிருந்தது.

இத்தாலியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மீன்பிடிப் படகொன்றில், 700 பேர் அடைத்து வரப்பட்ட நிலையில், அந்தப் படகிலிருந்து பலர், கடலுக்குள் குதிக்கும் காட்சிகளும் வெளியாகின. இவ்வாறு மீட்கப்பட்டவர்களில், ஐந்து நாட்கள் மட்டுமேயான குழந்தையொன்றும் உள்ளடங்குகின்றது. இவ்வாறு மீட்கப்பட்டவர்கள், இத்தாலியுள்ள வைத்தியசாலையொன்றுக்கு அனுப்பப்பட்டனர்.

திங்கட்கிழமை மாத்திரம், மீட்பு நடவடிக்கைகள் 40 இடம்பெற்றதாகத் தெரிவித்த பேச்சாளரொருவர், இதன்போது 6,500 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதே கடற்பகுதியில் வைத்து, ஞாயிற்றுக்கிழமையன்று 1,000 பேர் மீட்கப்பட்டிருந்தனர்.

இவ்வாண்டில் இதுவரை, சுமார் 112,500 பேர், இத்தாலிக்கு அகதிகளாக வந்துள்ளனர். கடந்தாண்டு, இதே கட்டத்தில் 116,000 பேர் அகதிகளாக வந்திருந்தனர். இவ்வாறு வருபவர்களில் பெரும்பான்மையினர், ஆபிரிக்காவைச் சேர்ந்தவர்களாவர்.
இத்தாலியை நோக்கிப் புறப்படும் இவ்வாறான படகுகளில், போதுமான சுகாதார வசதிகள் காணப்படுவதில்லை என்பதோடு, அளவுக்கதிகமானோர் அடைத்து வரப்படுவதால், நெருக்கடி நிலைமை ஏற்படுவது வழக்கமாகும். இதன்காரணமாக, அகதிகள் சிலர், கடலுக்கு நடுவிலேயே படகுகளிலிருந்து கடலுக்குள் குதிப்பதும் வழக்கமாகும்.

இவ்வாண்டு ஆரம்பத்திலிருந்து இதுவரை, கிரேக்கத்துக்கோ அல்லது இத்தாலிக்கோ படகுகள் மூலமாகச் செல்ல முயன்ற 3,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: