ஒப்புதல் பெற்ற மலேரியா மருந்து!

Tuesday, July 24th, 2018

மலேரியா சிகிச்சைக்கான மருந்து ஒன்று 60 வருடங்களில் முதன்முறையாக அமெரிக்க அதிகாரிகளால் ஒப்பு கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மருந்து குறிப்பாக ஒருமுறை வந்தால் மீண்டும் மீண்டும் வரக்கூடிய மலேரியாவுக்கான மருந்தாகும். இவ்வகை மலேரியாவால் ஆண்டுக்கு 8.5மில்லியன் பேர் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகை மலேரியா தொற்று கல்லீரலில் தங்கி கொண்டு மீண்டும் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்துவதால் இதை அழிப்பது கடினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டஃபினான்குயின் என்னும் மருந்தை கண்டறிந்தது ஒரு “மிகப்பெரிய சாதனை” என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள மேற்பார்வையாளர்கள் இதனை மக்களுக்கு பரிந்துரை செய்வது குறித்து ஆராய்ச்சி செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

`பிளாஸ்மோடியம் விவாக்ஸ்` என்னும் ஒட்டுண்ணியால் வரும் இந்த வகை மலேரியா ஆப்ரிக்காவின் துணை சஹாரா கண்டங்களுக்கு வெளியே உள்ள பகுதியில் மிகவும் அதிகம். குழந்தைகள் இந்த வகை மலேரியாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்

இந்த கொசு ஒருமுறை கடித்தால் பல முறை அவர்களுக்கு மலேரியா வருகிறது மேலும் ஒவ்வொரு முறை நோய் ஏற்படும்போது அவர்கள் மிகவும் பலவீனமாக ஆகின்றனர்.

மேலும் இந்த வகை மலேரியா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியதால் உலகமுழுவதும் இதை அழிப்பது மிகவும் கடினம்.

கல்லீரலில் மறைந்துள்ள அந்த ஒட்டுண்ணியை அழிக்கக்கூடிய டஃபினான்குயின் என்னும் மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கல்லீரலில் மறைந்துள்ள மலேரியா ஒட்டுண்ணியை அழிப்பதற்கு நடைமுறையில் ப்ரைமாகுயின் என்னும் மருந்து உள்ளது.

டஃபினானகுயின் மருந்தை ஒருமுறை எடுத்துக் கொண்டால் போதும் ஆனால் ப்ரைமாகுயின் மருந்தை 14 நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதில் சிலர் ஒரிரு நாட்களில் குணமடைவது போல் தோன்றியவுடன் மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்திவிடுவார்கள் பின்பு அது மீண்டும் வருவதற்கு வழிசெய்யும்.

அமெரிக்காவில் இதை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ள போதிலும் இதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்டமாக இந்த வகை மலேரியா அதிகமாக இருக்கும் நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த மருந்தை சோதனை செய்வர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: