ஐ.நா.,வில் ரஷ்ய தீர்மானம் தோல்வி!

Tuesday, April 17th, 2018

சிரியாவில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஐ.நா.வில் ரஷ்யா கொண்டு வந்த கண்டன தீர்மானம் தோல்வியடைந்தது.

சிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் இணைந்து ஏவுகணை தாக்குதல் நடத்தின. அமெரிக்க படைகளின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில் ரஷ்யா தரப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.கூட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் பொலிவியா, கோட்டிவார் (ஐவரி கோஸ்ட்), ஈக்வடோரியல் கினி, எத்தியோப்பியா, கஜகஸ்தான், குவைத், நெதர்லாந்து, பெரு, போலந்து, சுவீடன் ஆகிய 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன.

ரஷ்யாவின் தீர்மானத்துக்கு சீனா, பொலிவியா ஆதரவு அளித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 8 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 4 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனால் ரஷ்யாவின் தீர்மானம் தோல்வியடைந்தது.

இதன்பின் நடந்த விவாதத்தில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே பேசியது:உலகில் எங்கும் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்படக்கூடாது. சிரியா மீண்டும் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால், அடுத்து நாங்கள் நடத்தும் தாக்குதல் மிகவும் கடுமையாக இருக்கும், என்றார்.

ரஷ்ய தூதர் வாசிலி நிபென்ஜியா பேசும்போது, உலகம் உங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது. உங்களின் இரட்டை வேடத்தை பாத்துக்கொண்டிருக்கிறது என்பதை உணருங்கள், என்றார்.

Related posts: