ஐ.நா தீர்மானத்தின் மீது பாய்ந்தது சீனா மற்றும் ரஷ்யாவின் ‘வீட்டோ’!

Wednesday, December 7th, 2016

சிரியாவில் உக்கிர மோதல் இடம்பெறும் அலெப்போ நகரில் ஏழு நாள் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானத்தை ரஷ்யா மற்றும் சீனா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்துள்ளன.

உறுப்பு நாடுகளுக்கு தீர்மானத்தின் இறுதி ஆவணத்தை ஆய்வு செய்ய 24 மணிநேர அவகாசம் வழங்கும் பாதுகாப்புச் சபை விதிகள் மீறப்பட்டிருப்பதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை நிராகரித்த அமெரிக்கா இது இட்டுக்கட்டப்பட்ட அதாரம் என்று குறிப்பிட்டது. அலெப்போவில் சிரிய அரச படையின் முன்னேற்றத்தை ரஷ்யா பாதுகாக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியது.

கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு கிழக்கு அலெப்போவில் இராணுவம் மேலும் பல பகுதிகளிலும் முன்னேற்றம் கண்டிருக்கும் நிலையிலேயே பாதுகாப்புச் சபை தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. அலெப்போவில் இருந்து வரும் செய்திகள் உறுதியாகும் பட்சத்தில் கடந்த ஒருவராத்திற்குள் அரச படை கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டின் 70 வீதமான நிலத்தை மீட்டுள்ளது.

தொடர்ந்து கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதியில் 100,000க்கும் அதிகமானவர்கள் முற்றுகையில் சிக்கியுள்ளனர். அந்த பகுதிகளில் உணவு பற்றாக்குறை இருப்பதோடு மருத்துவமனைகளும் இயங்காமல் உள்ளன.

கடந்த திங்கட்கிழமை எகிப்து, நியூஸிலாந்து மற்றும் ஸ்பைன் நாடுகள் பாதுகாப்புச் சபையில் கூட்டாக முன்வைத்த தீர்மானத்தின் மீதே ரஷ்யா மற்றும் சீன வீட்டோ அதிகாரத்தை பிரயோகித்தன. இந்த தீர்மானத்தை நிராகரித்து வெனிசுவேலாவும் வாக்களித்ததோடு அங்கோலா வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டது.

எனினும் பாதுகாப்புச் சபையில் 11 உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. தீர்மானத்தில் யுத்த நிறுத்தம் ஒன்று கடைப்பிடிக்கப்பட்டு அலெப்போவுக்கு உடனடியாக உதவிகள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆவணத்தை பரிசீலிக்க சம்பிரதாயமாக வழங்கப்படும் 24 மணி நேர அவகாசம் வழங்கப்படவில்லை என்று ரஷ்யாவின் ஐ.நா தூதுவர் விடாலி சர்கின் குறிப்பிட்டார்.

நேற்று மற்றும் இன்றை தினங்களில் ஜெனீவாவில் நடைபெறும் ரஷ்ய மற்றும் அமெரிக்க நிபுணர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை முடியும் வரை இந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் சர்கின் கோரி இருந்தார்.

எனினும் ரஷ்யா இட்டுக்கட்டப்பட்ட ஆதாரத்தை முன்வைப்பதாக ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பிரதி தூதுவர் மைகல் சிசோன் குறிப்பிட்டார். “பாதுகாப்பு சபையை ரஷ்யாவின் விதிகளுக்குள் விட்டுவிட நாம் இடமளிக்க மாட்டோம்” என்று மைகல் சிசோன் குறிப்பிட்டார்.

இராணுவ வெற்றி ஒன்றுக்காக மனித இழப்புகளை கணக்கில் கொள்ளாமல் ரஷ்யா தீர்மானம் எடுப்பதாக ஐ.நாவுக்கான பிரான்ஸ் தூதுவர் பிரான்கொயிஸ் டெலட்ரே குறிப்பிட்டார். பிரிட்டனின் ஐ.நா பிரதிநிதி மத்தியூ ரிகிரொப்ட் குறிப்பிடும்போது, “அலெப்போவில் தற்போது நரக வேதனையை அனுபவித்து வரும் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகளை பணயக்கைதியாக வைத்தே ரஷ்யாவும் அதன் ஆதரவாளர்களும் வீட்டோவை பயன்படுத்தியுள்ளனர்” என்றார். கடந்த ஐந்து ஆண்டுகளில் சிரியா தொடர்பான பாதுகாப்புச் சபை தீர்மானத்தின் மீது ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவது இது ஆறாவது தடவையாகும்.

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் நெருங்கிய நட்பு நாடான ரஷ்யா அந்த அரசுக்கு ஆதரவாக கடந்த 2015 செப்டெம்பர் தொடக்கம் சிரியாவில் வான் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.

இந்நிலையில் அலெப்போ முழுவதையும் கைப்பற்றும் இலக்குடன் அஸாத் அரசு மூன்று வாரத்திற்கு முன்னர் அங்கு உக்கிர தாக்குதல்களை ஆரம்பித்தது தொடக்கம் அரச படை வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. அலெப்போவில் தோல்வியடையும் பட்சத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.

இந்த தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு கிழக்கு அலெப்போவில் 44 சிறுவர்கள் உட்பட குறைந்தது 319 பேர் கொல்லப்பட்டிருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிழக்கு அலெப்போவில் இருந்து கிளர்ச்சியாளர்களை முற்றாக வாபஸ் பெறச்செய்யும் முயற்சியாக ரஷ்யா, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. எனினும் நகரை விட்டு வெளியேறுவதை கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

2011 ஆம் ஆண்டு பஷர் அல் அஸாத் அரசுக்கு எதிராக மக்கள் எழுச்சி போராட்டம் ஆரம்பிக்கும் வரை அலெப்போ நாட்டின் மிகப்பெரிய நகராக இருந்ததோடு வர்த்தக மையமாகவும் செயற்பட்டது.

coltkn-12-07-fr-04163209081_5077537_06122016_mss_cmy

Related posts: