ஐ.நா. அதிகாரிக்கு தடை விதித்த மியான்மர் அரசு!

Friday, December 22nd, 2017

ஐ. நா.மனித உரிமை விசாரணை அதிகாரி ஒருதலைபட்சமாக இருப்பதாலும், அவர் மீது நம்பிக்கை இல்லாததாலும் தங்கள் நாட்டிற்குள் நுழைய மியான்மர் அரசு தடை விதித்துள்ளது.

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல்கள் உட்பட, மியான்மரின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக ஐ.நா. விசாரணை அதிகாரி யாங்ஹீ லீ ஜனவரி மாதம் மியான்மர் செல்ல இருந்தார். அவர் ஒருதலைபட்சமாக இருப்பதாலும், அவர் மீது நம்பிக்கை இல்லாததாலும் நாட்டுக்குள் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது.

ரக்கினேவில் ஏதோ மோசமான செயல் நடந்து வருவதால் தான், தனக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு தடை விதிக்கப்பட்ட முடிவால் குழப்பமும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாகவும் யாங்ஹீ லீ கூறியுள்ளார். கடந்த ஜூலை மாதம் மியான்மருக்கு சென்ற யாங்ஹீ லீ, மியான்மரில் ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து கவலைகளை எழுப்பியிருந்தார்.

Related posts: