ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் தொடர்ந்து பிரித்தானியாவில் இருக்க அனுமதி

Saturday, June 24th, 2017

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகியமையின் பின்னர் பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் தொடர்ந்தும் இருக்கலாம் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பிரஸ்சல்ஸில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மே இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.இது தொடர்பில் பிரதமர் மே உரையாற்றுகையில் “பிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானியாவில் இதுவரை காலமும் வாழ்ந்து வந்த ஒன்றிய பிரஜைகள் தங்களது குடும்பங்களை பிரிய வேண்டிய நிலைமை ஏற்படாது” என தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளின் வதிவிட உத்தரவாதம் தொடர்பில் நிச்சயமற்ற தன்மை ஒன்று நிலவி வந்த நிலையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த ஒன்றியப் பிரஜைகள் சுகாதாரம் கல்வி மற்றும் ஏனைய நலன்களை அனுபவிப்பதற்கும் அனுமதிக்கப்படுவர் என மே உறுதியளித்துள்ளார்.

இருப்பினும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கும் பிரித்தானியர்களின் நிலை தொடர்பிலும் இது போன்ற உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் எனவும் மே வலியுறுத்தியுள்ளார்.இந்நிலையில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாத நிறைவில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா முழுமையாக வெளியேறி விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: