ஏவுகணை சோதனை மையம் அழிப்பு – வடகொரியாவினால் புகைப்படம் வெளியீடு!

Wednesday, July 25th, 2018

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் நிலவியது. எனவே அதை முடிவுக்கு கொண்டுவர தீவிர ஏற்பாடுகள் நடைபெற்றன.

வடகொரியா-தென் கொரியா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. வடகொரியா அதிபர் கிம்ஜாங் யங்கும், தென்கொரிய அதிபர் ஜயே மூன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார். அதன்பின்னர் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தன. இதற்காக சிங்கப்பூரில் கடந்த ஜூன் 12-ம் தேதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் ஆகியோருக்கு இடையே வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது.

அப்போது இருநாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், வடகொரியாவில் உள்ள அணு ஆயுதங்கள் அனைத்தையும் அழித்து விடுவதாக கிம் ஜாங் அன் ஒப்புதல் தெரிவித்திருந்தார்

ஆனால், அதன்பிறகு அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கையில் வடகொரியா வேகம் காட்டாததால் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை நீக்க முடியாது என அமெரிக்கா சமீபத்தில் தெரிவித்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு உருவாகும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், சிங்கப்பூர் ஒப்பந்தத்தின் போது கிம் அளித்த ஒப்புதலை நிறைவேற்றும் விதமாக அந்நாட்டில் சோகே எனும் இடத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தை அழிக்கும் நடவடிக்கையை வடகொரியா தொடங்கிவிட்டது. இதற்கான சேட்டிலைட் புகைப்படத்தை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது.

வடகொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்கவும், அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் இந்த சோகே ராக்கெட் ஏவுதளம் முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: