எங்களை காப்பாற்றுங்கள்..! மேயர் செர்ஜியோ பிரோசி கண்ணீருடன் வேண்டுகோள்!

Thursday, August 25th, 2016

நில நடுக்க பாதிப்பில் சிக்கியுள்ள இத்தாலியில் ஒரு நகரமே இடிபாடுகளால் முழுமையாக மாயமாகிவிட்டது என்று அந்த நகர மேயரே கண்ணீரோடு கூறியுள்ளார்.

இத்தாலியின் மத்திய பகுதியை மையம் கொண்டு இன்று அதிகாலை கடுமையான நில நடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவு கோலில் இது 6.2 என்ற அளவில் பதிவாகியிருந்தது.நில நடுக்கத்தால் அமட்ரைஸ் என்ற குட்டி நகரமே மாயமாகிவிட்டது.. எங்களை காப்பாற்றுங்கள்.. என்று, அதன் மேயர் செர்ஜியோ பிரோசி கண்ணீருடன் கூறியுள்ளார்.

இந்த நகரம், 2 ஆயிரம் மக்களை கொண்டது. லசியோ மண்டலத்தில் அமைந்துள்ளது. அமட்ரைஸ் நகர மக்கள் ஒவ்வொருவரின் செல்போன் எண்களுக்கும் மீட்பு படையினர் அழைப்பு செய்கிறார்கள். மறுமுனையில் போன் எடுக்கப்படாவிட்டால் அடுத்த நம்பருக்கு போன் செய்கிறார்கள்.

போன் எடுக்கவில்லை என்றால் அந்த நபர் இறந்திருக்கலாம் என முடிவு செய்யப்படுகிறது. இந்த நகரின் அருகேயுள்ள அக்குமோலி என்ற மற்றொரு நகரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

யாரையாவது உயிரோடு கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே உள்ளது என்று அந்த நகர மேயர் ஸ்டேபனோ பெட்ருச்சி கதறியுள்ளார். அமட்ரைஸ் நகரம், அமட்ரிசினா பாஸ்தா சாஸ் உணவுக்கு பெயர் பெற்றது. இவ்வாரத்தில் அங்கு உணவு திருவிழா நடைபெற்றது. எனவே சுற்றுலா பயணிகளும் பெருமளவுக்கு வந்திருந்தனர். எனவே உயிரிழந்தோர் எண்ணிக்கையை கணக்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related posts: