எகிப்து தேவாலய தாக்குதல்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் பொறுப்பேற்பு!

Tuesday, April 11th, 2017

எகிப்திலுள்ள தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு இஸ்லாமியத் தீவிரவாதிகள் (IS) பொறுப்பேற்றுள்ளனர். இந்த தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் டன்டா நகரில் உள்ள காப்டிக் தேவாலயத்தில், பயங்கரவாதியொருவர் நேற்றுமுன்தினம் (09) நிகழ்த்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர். 78 பேர் வரையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதல் நடைபெற்று சில மணி நேரங்களுக்குப் பிறகு, அலெக்ஸாண்டிரியாவின் மன்ஷியா மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் மற்றொரு குண்டு வெடிப்பு சம்பவம் அதே பாணியில் நிகழ்த்தப்பட்டது.

அதில், பொலிஸார் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். மேலும், 41 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உடலில் வெடிகுண்டுகளைப் பொருத்திக்கொண்டு தேவாலயத்தினுள் நுழைய முயன்ற பயங்கரவாதியை பொலிஸார் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். இதன்போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு சிறுபான்மை கிறிஸ்தவ இனத்தவர்கள் நேற்றைய தினம் தேவாலயங்களில் கூடியிருந்த சந்தர்ப்பத்தில், அவர்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல்களை அடுத்து, எகிப்து ஜனாதிபதி அல் சிசி, மூன்று மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார்.

 

Related posts: