உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம்: எச்சரிக்கிறது ஐ.நா!

Monday, October 9th, 2017

வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகளை தங்கவைக்க மிகப்பெரிய அகதிகள் முகாமினை அமைக்க வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளது.

வங்கதேசத்தில் காக்ஸ் பஜார் அருகே உள்ள குட்டுபலாங் அகதிகள் முகாமை விஸ்தரித்து மூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து ரோஹிங்யா அகதிகளையும் தங்க வைக்க வங்கதேசம் முயற்சி எடுத்து வருகின்றது.

உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் என்ற அடையாளத்தைப் பெற்றாலும் சன நெருக்கடியால் கடுமையான பேராபத்துகளையும் சுகாதார சீர்கேடுகளையும் சந்திக்கும் ஆபத்திருப்பதாக டாக்காவில் உள்ள ஐ.நா.ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் வட்கின்ஸ் எச்சரித்துள்ளார்.

நோய் பாதிப்பிற்கு எளிதில் உள்ளாகக்கூடிய மக்களை ஒரே இடத்தில் தங்கவைக்கும் திட்டம் மிகவும் ஆபத்தானது. ஆங்காங்கே முகாம்களை அமைப்பதன் மூலமாகவே சுகாதார சீர்கேடுகளையும் அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.எனினும், ஒரே இடத்தில் அனைத்து அகதிகளும் இருக்கும் பொழுது அவர்களுக்கான நிவாரணங்களையும் ஆயுதக் குழுக்களின் வசமிருந்து ரோஹிங்யர்களை பாதுகாக்க முடியும் என வங்கதேச அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் மியன்மாரில் ஏற்பட்ட வன்முறை நிகழ்வுகளால் இதுவரை ஐந்து இலட்சம் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.இதன் மூலம் வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா மக்களின் மொத்த எண்ணிக்கை எட்டு இலட்சத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: