உடைகின்றதா தி.மு.க?…

Tuesday, August 14th, 2018

தி.மு.க தானாகவே உடையும் என்றும், அதனை உடைக்க வேண்டிய அவசியம் தனக்கு கிடையாது என்றும் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் கருணாநிதி உயிரிழந்து ஒரு வாரம் ஆகவுள்ள நிலையில் அவரது வீட்டில் தற்போது மோதல் வெடித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அழகிரி தற்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகின்றார்.

“தி.மு.கவில் உள்ளவர்கள் பணத்திற்கு விலைப்போய்விட்டார்கள். இந்நிலையில், நான் அதிருப்தியில் உள்ளதை வெளிப்படுத்தியுள்ளேன்.

தி.மு.கவில் பதவிகளுக்கு பணத்திற்கு விற்கப்படுகின்றனர். நான் பொறுப்புக்கு வருவதையே கருணாநிதியின் தொண்டர்கள் விரும்புகின்றனர்.

தற்போதைய தி.மு.க தலைமை சரியாக செயற்படவில்லை. அப்படி செயற்பட்டிருந்தால், எவ்வாறு ஆர்.கே. நகர் தொகுதி தேர்தலில் திமு..க டெப்போசீட்டை இழந்திருக்கும்.

தி.மு.க தானாகவே உடையும். அதனை உடைக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. நான் அப்படி செய்யப் போவதில்லை” என மு.க. அழகிரி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாளைய தினம் தி.மு.கவின் செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில், அழகிரி வெளியிட்டிருக்கும் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, இன்று காலை கோபாலபுரத்தில் ஊடகவிலாளர்களை சந்தித்த அழகிரி, “என் ஆதங்கம் முழுவதையும் அப்பா கருணாநிதியிடம் கொட்டிவிட்டேன். ஆதங்கங்கள் எல்லாம் தற்போதைய அரசியல் நிலை குறித்துதான்.

என்னுடைய தலைவர் கலைஞருடைய உண்மையான விசுவாசமுள்ள உடன் பிறப்புகள் எல்லாம் என்னுடைய பக்கம்தான் இருக்கிறார்கள். அவர்கள் என்னை ஆதரித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு காலம் பின்னால் பதில் கூறும், இப்போது அது உங்களுக்கு புரியாது. மேலும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் செயல்படாத தலைவராக உள்ளார்.

நான் கட்சியில் மீண்டும் சேர வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். திமுக நிர்வாகிகள் ரஜினிகாந்துடன் தொடர்பில் உள்ளனர்” என கூறியுள்ளார்.

இதேவேளை, அழகிரி தி.மு.கவில் முக்கிய பதவி ஒன்றை கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில்தான் ஸ்டாலின் பெரிய குழப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அழகிரிக்கு விடாப்பிடியாக பதவி கொடுக்க கூடாது என்ற முடிவில் அவர் இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. கனிமொழிக்கு பதவி கொடுப்பதில் பிரச்சனை இல்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

எனினும், அழகிரியை கட்சியில் கூட சேர்க்கும் எண்ணத்தில் ஸ்டாலின் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால், கருணாநிதி அஞ்சலி கூட்டமாக நடத்தப்பட இருந்த தி.மு.க செயற்குழு கூட்டம் அழகிரியின் பேச்சால் முக்கியமான முடிவெடுக்கும் கூட்டமாக மாறியுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: