ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட விஞ்ஞானியை ‘நண்பர்’ என அழைத்த அமெரிக்கா?

Tuesday, August 9th, 2016

ஈரானின் அணுசக்திச் செயற்றிட்டங்கள் தொடர்பான இரகசிய விடயங்களை அமெரிக்காவுக்கு வழங்கிய குற்றச்சாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அணு விஞ்ஞானியான ஷஹ்ராம் அமிரியை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள், “நண்பர்” என அழைத்தமை வெளியாகியுள்ளது.

தனது இஸ்லாமியக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக 2009ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவுக்குச் சென்ற அமிரி, அங்கு வைத்துக் காணாமல் போய், ஓராண்டின் பின்னர், அமெரிக்காவில் தோன்றியிருந்தார். அங்கு வைத்து அவர், அமெரிக்காவால் கடத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அமெரிக்காவில் கல்விகற்றுவருவதாகவும் மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தினார்.

பின்னர் அவர், 2010ஆம் ஆண்டு ஜூலையில், ஈரானுக்குத் திரும்பியிருந்தார். அமெரிக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ஈரான் விவகாரங்கள் பிரிவிலேயே, அவர் சரணடைந்து, ஈரானுக்குத் திரும்பியிருந்தார். ஆரம்பத்தில் அவருக்கு நாயகன் போன்ற வரவேற்பு வழங்கப்பட்டாலும், பின்னர் அவர் சிறையிலடைக்கப்பட்டார். அமெரிக்காவுக்கு அவர் உதவவில்லை எனத் திரும்பத் திரும்பத் தெரிவித்தாலும், அதை ஏற்றுக் கொள்வதற்கு, ஈரான் தயாராக இருந்திருக்கவில்லை.

இந்நிலையில், அவருக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான தொடர்புகளை உறுதிப்படுத்துவது போன்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளின் மின்னஞ்சல்கள் காணப்படுகின்றன. இராஜாங்கச் செயலாளராக ஹிலாரி கிளின்டன் இருந்தபோது, தனது மின்னஞ்சல் தேவைகளுக்காக தனிப்பட்ட மின்னஞ்சல் வழங்கியைப் பயன்படுத்தியிருந்ததோடு, அது தொடர்பான சர்ச்சை ஏற்பட்டதையடுத்து, மின்னஞ்சல்களைக் கையளித்திருந்தார். அவ்வாறு வழங்கப்பட்ட மின்னஞ்சல்கள், பகிரங்கப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், அவ்வாறு வெளியிடப்பட்ட மின்னஞ்சல்களில், ஹிலாரியின் அப்போதைய ஆலோசகரும் அவரது தற்போதைய பிரசாரச் செயற்குழுவின் முக்கிய பொறுப்பை வகிப்பவருமான ஜேக் சுலைவான், “(இராஜாங்கத் திணைக்கள உயரதிகாரியான) பில் பேர்ண்ஸிடம், நீங்கள் எவரைப் பற்றிக் கதைத்தீர்களோ அந்த நபர், (தூதரகத்தின்) தனது நாட்டின் விவகாரங்களுக்காகச் சென்றுள்ளாராம். அவரது வெளியேற்றத்துக்காக எடுத்த நேரம் தொடர்பாக அதிருப்தியடைந்ததாலேயே இது நடந்துள்ளதாம். அடுத்த 24 மணிநேரங்களில், ஊடகங்களில் இவ்விடயம் பெரிதாக மாறலாம். அதுபற்றி உங்களுக்குத் தொடர்ந்து அறிவிக்கிறேன்” என, ஒரு மின்னஞ்சல் தெரிவிக்கிறது.

அந்த மின்னஞ்சலுக்குச் சில நாட்களுக்கு முன்பாக, இன்னோர் அதிகாரி, ஹிலாரிக்கு அனுப்பிய மின்னஞ்சலில், “நாம் கதைக்கும் விடயம் தொடர்பாக, நாம் இராஜதந்திர, “உளவியல்” பிரச்சினையொன்றை எதிர்கொள்கிறோம், சட்டப் பிரச்சினையன்று. எங்களுடைய நண்பருக்கு, வெளியேறுவதற்கான வழியொன்று வழங்கப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மின்னஞ்சல்கள், அமெரிக்காவுக்கும் அவருக்குமிடையில் தொடர்புகள் காணப்பட்டன என்பதை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. எனினும், இந்த மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பாக, வெள்ளை மாளிகையோ அல்லது இராஜாங்கத் திணைக்களமோ, இதுவரையிலும் கருத்தெதனையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: