இஸ்ரேல் – ஹமாஸ் போதல் உக்கிரம் – ஹமாஸ் பங்கரவாத அமைப்பு அடியோடு துடைத்தெறியப்படும் – இஸ்ரேல் சூழுரை!

Monday, October 9th, 2023

இஸ்ரேல் மீது ஹமாஸ் பங்கரவாத அமைப்பு தாக்குதல்களை தொடுத்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேலும் கடும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதுடன், ஹமாஸ் பங்கரவாத அமைப்பு அடியோடு துடைத்தெறியப்படும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் பயங்கரவாத தாக்குதல்களை கண்டித்துள்ள அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பல்வேறு இராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளதுடன், மத்திய தரைக்கடலில் நிலைகொண்டிருந்த அந்நாட்டின் போர்க்கப்பல்களை இஸ்ரேலின் கடல் எல்லைகளுக்கு அருகில் நகர்த்தியுள்ளது.

இந்த போர்க்கப்பல்களில் போர் விமானங்கள் மற்றும் ஜெட்கள் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு கூடுதல் உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

இரஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய விமானத் தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு மேலும் இராணுவ உதவி வரும் நாட்களில் வழங்கப்படும் என்று கூறியுள்ள வெள்ளை மாளிகை, இஸ்ரேலின் எதிரிகள் இந்த சூழ்நிலையில் இருந்து ஆதாயம் தேட முயற்சிக்கக் கூடாது என்பதற்காகவும் கடுமையாக அமெரிக்கா செயல்படுவதாகவும் கூறியது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், “ஈரானின் நேரடி தலையீட்டிற்கான ஆதாரங்களை அமெரிக்கா கண்டறியவில்லை. ஆனால் காஸாவை தளமாகக் கொண்ட குழுவிற்கு ஈரான் பல ஆண்டுகளாக உதவி செய்து வருகிறது.

ஈரானிடம் இருந்து பல ஆண்டுகளாகப் பெற்ற ஆதரவுதான் ஹமாஸ் இவ்வாறு செயல்படுகிறது“ என்றும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஈரான் ஈடுபடவில்லை என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஈரான் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையிலான மோதலில் சுமார் 1,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் இஸ்ரேல் தரப்பில் மட்டும் சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்த இருதரப்புக்கும் இடையிலான மோதலில் ஏற்பட்ட இழப்புகளில் இது மிகவும் அதிகமாகும்.

கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகள் வான்வழியில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் விமானப்படையின் போர் விமானங்கள் மூலம் பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது குண்டு மழை பொழிந்தன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நாடு போரில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். அதன் காரணமாக காசாவில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு அவர் தெரிவித்துள்ளார். இந்தியா உட்பட அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி மற்றும் உக்ரைன் நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

“நாங்கள் போரைத் தொடங்குகிறோம். ஹமாஸ் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலால் இந்த போர் மூண்டுள்ளது. இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவிய எதிரிப்படைகளை அழிக்க தொடங்கி உள்ளோம். இது இடைவிடாமல் தொடரும். இஸ்ரேல் குடிமக்களுக்கான பாதுகாப்பை மீட்டெடுப்போம். நாங்கள் வெற்றி பெறுவோம்.

காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இப்போதே அங்கிருந்து வெளியேறுங்கள். ஏனெனில், எங்கள் படையினர் தடையின்றி செயல்பட உள்ளனர்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை தெற்கு இஸ்ரேல் பகுதியில் அந்நாட்டு இராணுவத்தினர் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். அதே நேரத்தில் வடக்கு இஸ்ரேல் பகுதியில் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் போராளிக் குழுவுடன் ஏற்பட்டுள்ள சிறிய மோதலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஹமாஸ் பயங்கரவாத குழுவுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என தகவல்.

ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த 600 பேர் கொல்லப்பட்டு உள்ளதாகவும், ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் சுமார் 400 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. 1,700 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல்.

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் கடத்திக் கொண்டு சென்றுள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

மறுபக்கம் ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு தலைவர் இஸ்மாயில் ஹனியே, அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் இந்த மோதலில் தங்களுடன் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். ஆபரேஷன் அல்-அக்ஸா என இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை ஹமாஸ் பயங்கரவாதிகள் குழு தெரிவித்துள்ளனர்.

நேபாள நாட்டை சேர்ந்த 10 மாணவர்கள் இஸ்ரேலில் கொல்லப்பட்டு உள்ளதாக அந்த நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவரும் இஸ்ரேலில் கொல்லப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: