இஸ்ரேலுக்கு புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டார்!

Thursday, June 3rd, 2021

இஸ்ரேலின் புதிய ஜனாதிபதியாக மூத்த அரசியல்வாதி ஐசக் ஹெர்ஸாக் தேர்வு செய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் அவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: இஸ்ரேலின் 10 ஆவது ஜனாதிபதியாக கடந்த 2014 ஆம் ஆண்டுமுதல் பொறுப்பு வகித்து வரும் ரூவன் ரிவ்லினின் பதவிக் காலம் அடுத்த மாதம் 9 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. எனவே, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ரகசியமாக நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில், ஐசக் ஹெர்ஸாக் வெற்றி பெற்றார். 120 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் அவருக்கு ஆதரவாக 87 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதை அடுத்து, 11 ஆவது ஜனாதிபதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

60 வயதாகும் ஐசக் ஹெர்ஸாக், முன்னாள் ஜனாதிபதியின் சாயிம் ஹெர்ஸாக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1983 முதல் 1993 ஆம் ஆண்டு வரை அவர் இஸ்ரேலின் ஜனாதிபதியாக பொறுப்பு வகித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியாக தெர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐசக் ஹெர்ஸாக் தொழிலாளர் அமைப்பின் தலைவராக இருந்துள்ளார். 2005 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை வீட்டு வசதி, சுற்றுலா, சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர் அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

இஸ்ரேலில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சிக் காலம் நிறைவடைந்து, புதிய பிரதமரின் தலைமையில் அரசு அமையவிருக்கும் பரபரப்பான சூழலில் ஐசக் ஹெர்ஸாக் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

000

Related posts: