இலட்சக்கணக்கான மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுக்க தாய்லாந்து மன்னரின் உடல் தகனம்!

Saturday, October 28th, 2017

தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் உடல் இறந்து ஓராண்டுக்கு பின்னர் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர்.

தாய்லாந்து நாட்டில் மன்னராக இருந்தவர், பூமிபால் அதுல்யதேஜ். இவர் 1946-ம் ஆண்டு, ஜூன் 9-ந் தேதி முடிசூட்டப்பட்டார். 9-ம் ராமர் என அழைக்கப்பட்டார். 88 வயதான நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந் தேதி மரணம் அடைந்தார். மரணம் அடையும் வரையில் மன்னராக இருந்தார். அந்த நாட்டில் அதிக காலம் மன்னராக இருந்தவர் இவர்தான்.

தாய்லாந்து நாட்டில் பல முறை ஆட்சி கவிழ்ப்புகள் நடந்துள்ளபோதும், அரசியலில் முக்கிய முடிவுகள் எடுத்து, நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி, தேசத்தந்தையாக திகழ்ந்து ஒட்டுமொத்த மக்களின் அன்பையும், அபிமானத்தையும் பெற்றிருந்தார். நவீன தாய்லாந்தை உருவாக்கிய பெருமையும் அவருக்கு உண்டு. அவரது மறைவுக்கு ஓராண்டு காலம் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. நாட்டு மக்கள் பெரும்பாலோர் கருப்பு நிற உடைகளை அணிந்து வந்தனர்.

இதையடுத்து மன்னரின் உடல் 26-ந் தேதி (நேற்று) புத்த மதப்படி தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அரண்மனையில் கடந்த 5 நாட்களாக புத்த மத வழக்கப்படி இறுதிச்சடங்கு நடந்து வந்தது.

மன்னரின் உடல் தகனத்தையொட்டி தாய்லாந்து நாட்டில் நேற்று பொது விடுமுறை விடப்பட்டிருந்தது. அங்கு அனைத்து அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.

அலங்கரிக்கப்பட்ட தேரில் மன்னரின் உடல், தகன மையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. பல லட்சம் மக்கள் மன்னருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர்.“நாங்கள் மட்டுமல்ல, உலகில் எங்கெல்லாம் தாய்லாந்து மக்கள் வசிக்கிறார்களோ அவர்கள் அத்தனை பேருக்கும் மன்னரின் மரணம் மாபெரும் இழப்பு ஆகும். அவருடைய ஆட்சிக்காலத்தில் நாங்கள் பிறந்ததே பெரும் பேறு” என்று உத்தானே சச்தேவ் என்பவர் உருக்கமுடன் குறிப்பிட்டார்.

இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் மன்னரின் குடும்பத்தினருடன், 40 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. யாரும் ‘செல்பி’ படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. தன்னார்வ தொண்டர்களும், ராணுவ வீரர்களும் மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்கிறார்களா என்பதை கண்காணித்தபடியே இருந்தனர். எந்தவொரு விரும்பத்தகாத நிகழ்வும் நடந்ததாக தகவல் இல்லை என்று கர்னல் அதிசாக் சுந்த்ரராக் கூறினார்.ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைத்து, ஆயுத சோதனைகளும் நடத்தப்பட்டன.

புத்த மத வழக்கப்படி உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு மன்னர் உடலுக்கு அவரது மகனும், புதிய மன்னருமான வஜிரலோங்கோன் தீ மூட்டினார்.

மன்னர் உடல் தகனம் முடிந்து விட்டதால், இனி முறைப்படி புதிய மன்னராக வஜிரலோங்கோன் (வயது 64) முடி சூட்டப்படுவார். அவர் பத்தாம் ராமர் என்று அழைக்கப்படுவார்

Related posts: