இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான அவசர தேவை எழுந்துள்ளது – ஜப்பான் அறிவிப்பு!

Tuesday, November 8th, 2022

ஜப்பானுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், அந்நாட்டு இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான, அவசரத் தேவை எழுந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.

வடகொரியாவின் தொடர்ச்சியான அணு ஆயுத ஏவுகணை சோதனை முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உள்ளிட்டவற்றின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜப்பானின் டோக்கியோவுக்கு தென்மேற்கே உள்ள சாகாமி வளைகுடாவில் ‘சர்வதேச கடற்படை திறனாய்வு’ என்ற பெயரில் நடைபெற்ற கடற்படை கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

‘ஜப்பானைச் சுற்றியுள்ள தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடல் பகுதியில் பாதுகாப்புச் சூழல் மிகவும் தீவிரமடைந்து வருகிறது. பிரச்னைகளைத் தவிர்ப்பதும், பேச்சுவார்த்தையை நாடுவதுமே முக்கியம். ஆனால், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எதிரான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

ஜப்பான் இராணுவத்தின் திறன் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வலிமைப்படுத்தப்படும். அதிக அளவிலான போர்க் கப்பல்களைத் தயாரித்தல், ஏவுகணைகளை எதிர்க்கும் திறனை வலுப்படுத்துதல், துருப்புகளின் செயல்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையில் ஜப்பான் உள்ளது’ என கூறினார்.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து 7 ஆண்டுகளுக்கு பின்னர், ‘கடல்சார் சுய பாதுகாப்புப் படை’ என்னும் கடற்படையை நிறுவி 70 ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் இந்த ஆய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அமெரிக்கா, அவுஸ்ரேலியா, கனடா, இந்தியா, நியூஸிலாந்து, சிங்கப்பூர், தென் கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் பங்கேற்றிருந்தது. கடந்த 20 ஆண்டுகளில் சர்வதேச அளவிலான திறனாய்வு நிகழ்ச்சியை ஜப்பான் ஏற்பாடு செய்திருப்பது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: