இரட்டை இலையை கேட்டு தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் மனு!
Thursday, March 16th, 2017
இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம், டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது சசிகலாவும், மனுதாரரான ஓபிஎஸ் அணி சார்பில் மைத்ரேயனும் விளக்கம் அளித்தனர்.
இந்தநிலையில், சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்துவதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். டெல்லியில் பிற்பகல் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையம் நசீம் ஜைதியை சந்தித்துப் பேசினார். அப்போது, சசிகலா பொதுச் செயலாளராக நியமித்ததை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். கட்சியின் பொருளாளர், அவைத் தலைவர், தொண்டர்கள் எங்களிடம்தான் உள்ளனர். இதனால் கட்சியின் பொதுச் செயலாளர் நியமனத்தை செல்லாது என்று அறிவித்து,
தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர் மூலம் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எங்கள் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவருடன் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, செம்மலை, மனோஜ் பாண்டியன், மாபா. பாண்டியராஜன், செம்மலை, எம்பிக்கள் மைத்ரேயன், சுந்தரம், அசோக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
அதன்பின்னர், நிருபர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:
சசிகலா பொதுச் செயலாளராக செயல்படும் முறை தவறானது. பொதுச் செயலாளர் பதவி தற்போது காலியாக உள்ளது. இதனால், கட்சியில் அடுத்த நிலையில் அவைத் தலைவர் இருக்கிறார். இதற்கிடையில், இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. பொதுச் செயலாளருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அவைத் தலைவருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. அவர்தான் யாருக்கு சின்னம் வழங்குவது என்பதை முடிவு செய்வார்.
இரட்டை இலை சின்னம் உறுதியாக எங்களுக்கு கிடைக்கும் என்று முழுமையாக நம்புகிறோம். கட்சியில் 100 சதவீதம் தொண்டர்கள், மக்கள் எங்களுடன் உள்ளனர். தனிப்பட்ட குடும்பத்திற்கு கட்சி செல்லக்கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், தங்களைப் பொறுப்பில் திணித்துக் கொள்ளக்கூடாது. ெதாண்டர்களின் மனநிலையில், பொறுப்பு உருவாக்கப்பட்டால்தான் நிலைக்கும். தன்னைத்தானே திணித்துக் கொண்டால், மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான வேட்பாளரை ஓரிரு நாளில் அறிவிப்போம். தனிப்பெரும்பான்மை எங்களுக்கு இருக்கிறது. வேறு கட்சிகள் எங்களுக்கு யாராவது ஆதரவு தெரிவித்தால் ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.
Related posts:
|
|
|


