இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் – ஐரோப்பிய ஆணையத்தின் புதிய தலைவர்!

Friday, July 19th, 2019

ஒப்பந்தமற்ற கடினமான பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டுமென புதிய ஐரோப்பிய ஆணையத் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள உர்சுலா வொன் டெர் லேயன் (Ursula von der Leyen) தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக ஜேர்மனியை சேர்ந்த உர்சுலா வொன் டெர் லேயன் தெரிவு செய்யப்பட்டார்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பிரெக்ஸிற் குறித்து கருத்துத் தெரிவித்த உர்சுலா,

‘பிரெக்ஸிற் ஏதோவொன்றின் முடிவு என நான் நினைக்கவில்லை, பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான புதிய உறவின் ஆரம்பம் என நினைக்கிறேன். எனவே ஒருவருக்கொருவர் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பிரெக்ஸிற் என்பது மிகவும் கடினமான ஒரு விடயம் அதனால்தான் ஏற்றுக் கொள்ளக்கூடிய நல்ல காரணங்கள் இருக்கும் பட்சத்தில் ஒக்ரோபர் 31 ஆம் திகதிக்கு அப்பால் மற்றுமொரு நீடிப்பு சாத்தியமாகும் என நான் கூறினேன். ஏனெனில் கடினமான பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்கு எம்மால் இயன்ற அனைத்தையும் நான் செய்ய வேண்டும்.

பிரித்தானியாவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் சிறந்தது என்றே நான் நினைக்கிறேன். இந்த ஒப்பந்தம் பிரித்தானியா எமக்கு வழங்கிய நிபந்தனைகளை உள்ளடக்கியே உருவாக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த எங்கள் நண்பர்களைப் பற்றி பேசாமல் ஐரோப்பாவைப் பற்றி பேச முடியாது. முதன் முறையாக, 2016 இல் ஒரு உறுப்பு நாடு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற முடிவு செய்தது.

இது ஒரு தீவிரமான முடிவு, அதற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம், ஆனால் நாங்கள் பிரித்தானியாவின் இந்த முடிவை மதிக்கிறோம். அப்போதிலிருந்தே ஒழுங்கான பிரெக்ஸிற்றை எட்டுவதற்காக பிரித்தானிய அரசாங்கத்துடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் செயலாற்றி வருகிறது’ என தெரிவித்துள்ளார்.

Related posts: