இந்திய விமானப்படை விமானம் மாயம் : வங்ககடலில் சந்தேகப்பொருள் கண்டு பிடிப்பு!

Saturday, July 23rd, 2016

விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.-32 ரக சரக்கு விமானம் ஒன்று தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 8.30 மணிக்கு அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு புறப்பட்டு சென்றது. அதில் 2 விமானிகள் உள்பட 6 சிப்பந்திகளும், 23 ராணுவ வீரர்களும் பயணம் செய்தனர்.

அந்தமான் தீவுக்கும் சென்னைக்கும் இடையேயான தூரம் 1,360 கிலோ மீட்டர் ஆகும். அந்த விமானம் காலை 11.30 மணிக்கு போர்ட்பிளேர் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும். ஆனால் கிளம்பிச் சென்ற 15 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ரேடாரின் பார்வையில் இருந்து விமானம் மாயமானது. அதாவது, சென்னையில் இருந்து கிழக்கே சுமார் 370 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா கடலுக்கு மேலே நடுவானில் 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, விமானம் திடீரென்று காணாமல் போய்விட்டது.

மாயமான அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காணாமல் போன விமானத்தை தேடி கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காலை 9.15 மணிக்கு அந்த விமானம் ரேடார் திரையில் இருந்து மாயமான போது சென்னையில் இருந்து கிழக்கே கடல் பகுதியில் 151 நாட்டிக்கல் மைல் தொலைவில் காணாமல் போய் இருந்தது. எனவே அந்த இடத்தை மையமாக கொண்டு தேடுதல் பணி நடந்து வருகிறது. நேற்றிரவு சிறிது நேரம் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இன்று 2-வது நாளாக தேடும் பணி நடந்தது. இது வரை எந்த பயனுள்ள தகவலும் கிடைக்கவில்லை. இன்று காலை 17 போர்க் கப்பல்கள் முற்றுகையிட்டு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. 6 விமானங்களும் அந்த விமானத்தை தேடி வருகின்றன.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இன்று சென்னை வந்தார். மாயமான விமானத்தை தேடும் பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார். சென்னை அருகே வங்ககடலில் சந்தேகப்பொருள் ஒன்று கண்டு பிடிக்கபட்டு உள்ளது. ஆனால் அது மாயமான விமானத்தின் பாகமா என உறுதி செய்யப்படவில்லை. சென்னையில் இருந்து 150 கடல்மைல் தொலைவில் இந்த பொருள கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: