இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்!

Tuesday, September 1st, 2020

இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது 84 ஆவது வயதில் காலமானார்.

புது தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பிரணாப் முகா்ஜி தொடா்ந்து ஆழ்ந்த மயக்க (கோமா) நிலையிலேயே இருந்து, நினைவு திரும்பாமலேயே அவரது உயிர் பிரிந்தது.

மூளையில் இரத்தக் கட்டியை அகற்றுவதற்காக கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி தில்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் பிரணாப் முகா்ஜி அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போதுமுதல் அவா் கோமாவில் இருந்தார்.

உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டது. அவருக்கு நுரையீரல் தொற்று, சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்னைகளும் உண்டானதால் அவற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சிகிச்சை எதுவும் பலனளிக்காமல் அவர் நேற்று (31) உயிரிழந்தார். முன்னதாக, அவருக்கு கொரேரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

பிரணாப் முகர்ஜி இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் உள்ள மிரடி எனும் சிறு கிராமத்தில் 1935-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி பிறந்தார். அரசியல், வரலாறு மற்றும் சட்டத் துறையில் பட்டங்கள் பெற்றவர். காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய பிரணாப், காங்கிரஸ் தலைமையிலான  இந்திய அரசில் பல்வேறு துறைகளில் பதவிகளை வகித்தவர்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பு பிரணாப் கல்லூரிப் பேராசிரியராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். 5 முறை மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். ஆசிரியர், பத்திரிகையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என பன்முகத் திறன் கொண்டவர்.

1982-ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசில் நிதியமைச்சராக பதவி வகித்தவர். 47 வயதில் மத்திய நிதியமைச்சர் பொறுப்பை பிரணாப் ஏற்ற போது, நாட்டின் மிக இளம் வயது நிதியமைச்சர் என்ற பெருமையும் பிரணாப்புக்குக் கிடைத்தது.

2009-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான இந்திய அமைச்சரவையில் மீண்டும் பிரணாப் முகர்ஜிக்கு மத்திய நிதியமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிரணாப் முகர்ஜி, 2012 முதல் 2017ஆம் ஆண்டு வரை இந்திய ஜனாதிபதி பதவியை வகித்தார்.

50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட பிரணாப் முகர்ஜிக்கு 2008-ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டு பிரணாப் முகர்ஜிக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: