இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவை முந்தும் – உலக வங்கி!

Tuesday, March 14th, 2017
இன்னும் 15 ஆண்டுகளில் அமெரிக்காவை விட பொருளாதார பலம் பொருந்திய நாடுகளாக இந்தியாவும் சீனாவும் உருவெடுக்கும் என உலக வங்கியின் ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான உலகின் மிகப் பெரிய பொருளாதார பலம் வாய்ந்த 10 நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தை பிடிக்கிறது.

இந்தியா 7-வது இடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 18 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் . உலக பொருளாதாரத்தில் கால் பகுதி அதாவது 24.3 சதவீதம் அமெரிக்காவின் வசம் இருக்கிறது.

இரண்டாவது இடத்தை ஆசிய கண்டத்தைச் சீனா பெறுகிறது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 11 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் .

இது மொத்த உலக பொருளாதாரத்தில் 14.8 சதவீதம். ஜப்பான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் . உலக பொருளாதாரத்தில் 6 சதவீதத்தை ஜப்பான் கையில் வைத்திருக்கிறது.

அடுத்த 3 இடங்களை ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் பெறுகின்றன. ஜெர்மனியின் ஜிடிபி 3.3 டிரில்லியனாக இருக்கிறது. பிரிட்டனில் $ 2.9 டிரில்லியன் ஜி.டி.பி. பிரான்ஸ் நாட்டின் ஜி.டி.பி $ 2.4 டிரில்லியனாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $ 2.1 டிரில்லியனாக வளர்ச்சி பெறும்..

அடுத்த இடம் இத்தாலிக்கு. இந்த நாட்டின் ஜி.டி.பி 1.8 டிரில்லியன். 9-வது இடத்தைப் பிரேசில் நாடு பெறுகிறது. இந்த நாட்டின் ஜி.டி.பி $ 1.8 டிரில்லியன். பத்தாவது இடத்தைப் பிடித்துள்ள கனடாவின் பொருளாதாரம் $ 1.5 டிரில்லியன்

தற்போது, அமெரிக்கா முதலிடத்தில் இருந்தாலும் சீனாவின் பொருளாதர வளர்ச்சி அதிவேகமாக இருப்பதாக ஐ.எம்.எஃப் எனப்படும் சர்வதேச நிதியக மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு சீனப் பொருளாதாரம் 6.7 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.

அமெரிக்க பொருளாதாரத்தின் வளர்ச்சி 1.6 சதவீதம்தான். தற்போது அமெரிக்காவை விட சீனா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் $ 7 டிரில்லியன் அளவுக்கு பின்தங்கியுள்ளது.

இந்தியப் பொருளாதாரமும் வெகு வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 6.6 சதவீதமாக இருந்தது.

கண்டங்களின் அடிப்படையில் பார்த்தால் ஆசியாவின் மொத்த உற்பத்தி மதிப்பு 33.84 சதவீதமாக இருக்கிறது. வட அமெரிக்க கண்டத்தின் மொத்த உற்பத்தி 27.95 சதவீதம்.

ஐரோப்பாவின் மொத்த உற்பத்தி 21.37. இந்த மூன்று கண்டங்களின் மொத்த உற்பத்தி 83.16 சதவீதமாக இருக்கிறது.

இன்னொரு வியப்புக்குரிய தகவல் PricewaterhouseCooper நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது, இன்னும் 15 ஆண்டுகளில் அமெரிக்காவை விட சீனாவும் இந்தியாவும் பொருளாதார பலம் வாய்ந்த நாடுகளாக மாறி விடுமாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை அதிக மக்கள் தொகை, தனிநபர் வருவாயை ஆண்டுக்கு 6,658 ரூபாயாக குறைத்திருக்கிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் 17 சதவீதம்.

மேற்கத்திய நாடுகளைவிட இது அதிகம். ‘ஹெல்த் கேர்’ போன்ற சேவைப்பிரிவு 57 சதவீதத்தை பெற்றிருக்கிறது. தொழிற்துறை 26 சதவீதமாக உள்ளது.

இந்தியர்களின் சேமிப்பு உயர்ந்திருக்கிறது, நடுத்தர வர்க்கத்தின் வருமானம் அதிகரித்திருப்பதும் இந்தியாவின் விரைவாக முன்னேற முக்கிய காரணம்

வரும் 2030-ம் ஆண்டு பொருளாதார பலத்தில் இந்தியா அமெரிக்காவை வீழ்த்தி விடுமாம்.

அமெரிக்கா முதலிடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு விடுமாம். முதலிடத்தை சீனா பிடிக்கும்.

இரண்டாவது இடத்தை இந்தியா பெறும். அந்தளவுக்கு இந்த நாடுகளின் பொருளார வளர்ச்சி அதிவேகமாக வளர்ச்சி கண்டுவருவதாக ப்ரைஸ்வாட்டர்கூப்பர் (PricewaterhouseCooper) நிறுவனம் கூறுகிறது.

வளர்ந்து வரும் நாடான இந்தோனேஷியா பொருளாதார பலம் வாய்ந்த நாடுகள் பட்டியலில் 4-வது இடத்தைப் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வரும் 2050-ம் ஆண்டு வாக்கில், பிரிட்டன் 10-வது இடத்துக்குத் தள்ளப்படுமாம், பிரான்ஸ் முதல் 10 பொருளாதார பலம் வாய்ந்த நாடுகள் பட்டியலிலேயே இருக்காது. இத்ததாலி 20-வது இடத்துக்கும் பின்தங்கி விடுமாம்.

மெக்ஸிகோ, துருக்கி, வியட்நாம் போன்ற வளர்ந்து வரும் நாடுகள் பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளைவிட அதிக பொருளாதார பலம் வாய்ந்த நாடுகளாக மாற வாய்ப்புள்ளதாம்.

Related posts: