ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு அறிவிப்பு!

Wednesday, September 8th, 2021

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் இடைக்கால அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தலிபான்களின் நிறுவுநர்களில் ஒருவரான முல்லா முகமட் ஹசன் அக்ஹூண்ட் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளதாக தலிபான் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, முல்லா அப்புல் கானி பரதர் நாட்டின் பிரதி பிரதமராகச் செயற்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  முன்னதாக, புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான்களுக்குள் இழுபறிகள் நிலவி வந்தன.

ஹக்கானி குழுவின் தலைவர் ஆனஸ் ஹக்கானிக்கும் தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதன்போது, ஏற்பட்ட கைகலப்பில் முல்லா அப்துல் கனி பரதர் காயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இரு தரப்புக்கும் இடையிலான பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்த்து வைப்பதற்காக பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பின் தலைவர் பைஸ் ஹமீட் காபூலுக்கு சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பாகிஸ்தானுக்கு எதிராக காபூலில் பெண்கள் நடத்திய பேரணியை கலைக்க தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

ஆப்கான் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காபூலில் பாகிஸ்தான் தூதரகம் முன் போராட்டம் நடத்தப்பட்ட போராட்டத்தில், பெண்கள் உட்பட 70 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts: