ஆப்கானில் தலிபான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்: 28 பேர் பலி

Wednesday, April 20th, 2016

காபூல் நகரின் இதயம் போன்ற மையப்பகுதியில் பாதுகாப்புத்துறை அலுவலகம் அருகில் இன்று தலிபான் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு நிரப்பிய லாரியை ஓட்டிவந்த தீவிரவாதி, பொது வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.

பயங்கர சத்தத்துடன் லாரி வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தனர். அருகில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன. லாரி தீப்பிடித்து எரிந்ததால் விண்ணை முட்டும் அளவுக்கு புகை எழுந்தது.

போலீசாரும் மீட்புக்குழுவினரும் துரிதமாக செயல்பட்டு காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே மற்றொரு தீவிரவாதி, பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினான். அவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

இந்த தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்றும் காபூல் காவல்துறை தலைவர் நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் 183 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடுமாக இருப்பதாகவும் கூறினார். முன்னதாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் 330 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

தலிபான்கள் வசந்தகால தாக்குதல்களை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்த ஒரு வாரத்தில் இந்த பயங்கர தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து சுமார் நூறடி தூரத்தில் ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை, நேட்டோ ராணுவ தலைமையகம், அமெரிக்க தூதரகம் போன்றவை அமைந்துள்ளன. இந்த தாக்குதலால் நேட்டோ ராணுவ தலைமையகம் மற்றும் அமெரிக்க தூதரகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

 

 

Related posts: