ஆட்சியமைக்க அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு!

Wednesday, February 15th, 2017

சட்டமன்றத்தில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை தன்னால் நிரூபிக்க முடியும் என தமிழகத்தின் பொறுப்பு முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம் தெரிவித்துள்ளார். தற்காலிகமாக ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை மறந்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளியென நீரூபிக்கப்பட்டமையால் அவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருப்பதுடன், 10 வருடங்கள் அரசியல் செய்வதற்கும் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் சசிகலாவுடன் போட்டியிட்ட பன்னீர்ச்செல்வம் முதலமைச்சராக பதவியை தொடர்வதற்கு மற்றுமொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

கூவத்தூரில் அடைத்துவைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கப்பட்டால் சட்டமன்றத்தில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமென பன்னீர்ச்செல்வம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தீர்ப்பு  சில நிமிடங்களில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தற்போதுள்ள ஒட்டுமொத்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எந்தவிதமான முடிவு எடுத்தாலும் அது கழக ஒற்றுமைக்கும், ஜெயலலிதாவின் நல்லாட்சித் தொடர்வதற்கும், மாநிலத்திற்கும் நன்மை அளிக்கும் நன்மையளிக்கும் வகையில் அமைய வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்காலிகமாக நமக்கிடையே ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளை மறந்து நாம் அனைவரும் எப்போதும் போல ஒற்றுமையுடன் இருந்து அவரவருக்குரிய முக்கியத்துவத்துடன் தொடர்ந்து செயல்படுவதில் எவ்வித தயக்கமும் இருக்காது எனவும் அவர் உறுதியளித்துள்ளார். அ.தி.மு.க பிளவுபடுவதை எதிரிகள் எதிர்பார்த்துள்ளனர். அதற்கு இடமளிக்கக்கூடாது. இடமளிப்பவர்களை எம்.ஜி.ஆர். ஆன்மாவும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் என்றும் மன்னிக்காது எனவும் பன்னீர்ச்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம், கூவத்தூர் விடுதியில் சசிகலா தரப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியில் பன்னீர்ச்செல்வம் இறங்கினார். இதற்காக அவருடைய ஆதரவு எம்பிக்கள் கூவத்தூரை நோக்கி விரைந்தனர்.

பன்னீர்ச்செல்வம் கூவத்தூர் சென்றால் வன்முறை வெடிக்கலாமென கருதியதால் முன்கூட்டியே பொலிஸ் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு விடுதி அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் பன்னீர்ச்செல்வத்தின் ஆதரவாளர்களின் கூவத்தூர் பயணம் இடைநடுவில் மறிக்கப்பட்டது.

அங்கு நிலைமை மேலும் மோசமடையாதவாறு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சசிகலா குற்றவாளியென தீர்ப்பு அறிவிக்கப்பட்டு சில நிமிடங்களில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர ராவை தொலைபேசியில் தொடர்புகொண்ட பன்னீர்ச்செல்வம் சட்டமன்றத்தில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை பலம் தனக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்.

மறுபக்கத்தில் சசிகலா தரப்பில் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியும் தனக்கு பெரும்பான்மை இருப்பதாக கடிதம் எழுதி கையளித்துள்ளார். இவ்வாறான நிலையில் இருவரையும் ஒரே நேரத்தில் தமக்கான பலத்தை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிடலாமென ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்

PANNEERSELVAM-PRESS_EPS

Related posts: