அவசர சட்டத்திருத்தம் பிறப்பிக்கப் பட்டாலும் பீட்டாவைத் தடை செய்தே ஆக வேண்டும்- எங்கள் உரிமைகளில் தலையிட அவர்கள் யார்?

Friday, January 20th, 2017

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களின் அறவழிப்போராட்டம் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் வெற்றிகரமாக தமிழ்நாடு முழுதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் டில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு விசயத்தில் ஒரு அவசரச் சட்டம் கொண்டு வரத் தேவையான வரைவுச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வரைவுச் சட்டமானது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படவுள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் பின் அவர் மூலமாக மாநில ஆளுநருக்கு அந்தச் சட்டத்திருத்தம் அனுப்பப்படும் எனவும் இறூதியில் தமிழக ஆளுநர் மூலமாக தமிழ்நாட்டில் அந்த சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்தப் படும். இதனடிப்படையில் இன்னும் ஓரிரு தினங்களில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் எனவும், அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மாணவர்கள் தங்களது போராட்டத்தை கை விட்டு விடும்படியாகவும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஆனால் முதல்வரின் கோரிக்கைக்கு மாணவர்கள் செவி சாய்த்ததாகத் தெரியவில்லை. முதல்வரின் அவசரச் சட்டத் திருத்த அறிவிப்பு போராட்டக் குழுவினரை சந்தோசப்படுத்தினாலும். முன்பே ஒரு முறை 2011 ஆம் வருடத்தில் மத்திய அரசு மூலமாக அவசர சட்டத் திருத்தம் பிறப்பிக்கப் பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப் பட்ட நிலையிலும் கூட பீட்டா அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராடி அதை தடை செய்து விட்டார்கள் என்பதால் முதலில் பீட்டாவைத் தடை செய்ய வேண்டும். அதுவரை இந்த விசயத்தில் நிரந்தரத் தீர்வென்ற ஒன்று கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார்கள்.

மாணவர்களின் கோரிக்கை நியாயமானது தான். ஏனெனில் பீட்டா அமைப்பினரும் அப்படித் தான் அறிவித்திருக்கிறார்கள். மாநில அரசோ, மத்திய அரசோ அவசரச் சட்டத் திருத்தம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு தடை நீங்கினாலும் ஜல்லிக்கட்டு தடைக்காக நாங்கள் மேல்முறையீடு செய்வோம். ஜல்லிக்கட்டு ‘மிருகவதை’ தான். அது விளையாட்டு இல்லை என்பதாக அவர்கள் இன்று மொத்த மாநிலத்தின் உணர்வுகளையும் பொருட்டாகக் கருதாமல் ஊடகங்களில் பதில் அளித்து வருகிறார்கள். ஆகவே இந்த பீட்டா அமைப்பினரை தமிழகத்தில் முதலில் தடை செய்ய வேண்டும் என்பதும் மாணவர்களின் கோரிக்கைகளில் ஒன்றாக வலுப்பட்டிருக்கிறது. பீட்டாவைப் பொறுத்த வரையில் தமிழ்நாட்டு மக்களான எங்களது பாரம்பரிய விளையாட்டை  அதன் நோக்கத்தையும், அர்த்தத்தையும் திரித்து உச்சநீதிமன்றத்தில் வழக்காடி மிருகவதை என்று சாதித்து தடை செய்ய அவர்கள் யார்? மாநில அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும், மத்திய அரசு அதை ஏற்பதாக பாவனை காட்டும். பீட்டா அமைப்பினர் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்காடுவார்கள். இன்று மாணவப் போராட்டத்திற்கு முடிவு காண வேண்டி ஆளும் கட்சியும், தமிழக முதல்வரும் இப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண முயன்றால் மட்டும் போதாது. எங்களுக்கு ஜல்லிக்கட்டு தடை விசயத்தில் நிரந்தரத் தீர்வு கண்டிப்பாக வேண்டும். அது வரை எங்களது போராட்டம் தொடரும் என ஒருமித்த குரலாக மாணவ, மாணவிகள், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கு கொண்டிருக்கும் குடும்பத் தலைவிகள் உட்பட அனைவருமே ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். போராட்டத்தின் முக்கிய குறிக்கோளாக நிபந்தனையற்ற நிரந்தரத் தீர்வு முன்வைக்கப் பட்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகளோடு உச்சநீதிமன்றத்தின் பங்கும் இதில் இருப்பதால் ஜல்லிக்கட்டு விசயத்தில் அடுத்து என்ன நிகழவிருக்கிறது என்பதை பொறுத்திருந்து காணலாம்.

ban_peta

Related posts: