அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்: ஏராளமானோர் காயம்!

Saturday, December 1st, 2018

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நிலநடுக்கத்தால் வீட்டின் கண்ணாடிகள், கனமான பொருட்கள் கீழே விழுந்ததில் ஏராளமான பொதுமக்கள் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் பலி எதுவும் ஏற்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் அலாஸ்காவின் சாலைகள் உட்பட ஏராளமான உள்கட்டமைப்புகள் அடியோடு நாசமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலாஸ்கா மாகாணத்தின் கெனாய் தீபகற்ப பகுதியில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகளும் இதர கட்டடங்களும் குலுங்கின.

இதனால் பீதியடைந்த மக்கள், கட்டடங்களைவிட்டு வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சமடைந்தனர். 4 முறை பின் அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், கட்டடங்களும் சாலைகளும் சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தால் கெனாய் தீபகற்பத்திலுள்ள கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேற்கு கடலோர பகுதிகளிலும், கனடாவின் கடலோர பகுதிகளிலும் சுனாமி ஆபத்து உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக அந்நாட்டின் சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்திருந்தது.

Related posts: