அமெரிக்க மின்னணுப் பொருள்களை புறக்கணிக்கிறது துருக்கி!

Wednesday, August 15th, 2018

அமெரிக்க மின்னணுப் பொருள்களை புறக்கணிக்கப் போவதாக துருக்கி அறிவித்துள்ளது.

தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக துருக்கி அதிபர் எர்டோகன் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து துருக்கி தொலைக்காட்சிகளில் செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பான உரையில் எர்டோகன் கூறியதாவது:

துருக்கியின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும் வகையில் அமெரிக்கா விதித்துள்ள தடைகளுக்குப் பதிலடியாக, அவர்களது மின்னணு பொருள்களை நாம் புறக்கணிப்போம்.

அமெரிக்காவிடம் ஐ-போன்கள் இருக்கிறது என்றால், அதற்கு மாற்றாக தென் கொரியாவின் சாம்சங் போனைப் பயன்படுத்தலாம்.

அது போதாதென்று, உள்நாட்டு செல்லிடப் பேசித் தயாரிப்பாளர்களான வீனஸ், வெஸ்டல் ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

துருக்கியின் பொருளாதாரத்துக்கு எதிரான மிகப் பெரிய தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. எனினும், அதற்கு அஞ்சி அமெரிக்காவிடம் துருக்கி ஒருபோதும் பணியாது.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வருவது, பணவீக்கம் ஆகிய பிரச்னைகளை துருக்கி சந்தித்து வருவது உண்மைதான்.

எனினும், அந்தப் பிரச்னைகளைக் களைய மும்முரமான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் எர்டோகன்.

துருக்கியில், ராணுவம் மற்றும் காவல்துறையின் ஒரு பிரிவினர் அதிபர் எர்டோகன் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் கடந்த 2016-ஆம் ஆண்டில் ஈடுபட்டனர்.

எனினும், அந்த முயற்சியை அரசுப் படைகள் வெற்றிகரமாக முறியடித்தன. இந்த சம்பவத்தில் சுமார் 250 பேர் உயிரிழந்தனர்.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்துள்ள மதத் தலைவர் ஃபெதுல்லா குலென் தூண்டி விடுவதாக துருக்கி குற்றம் சாட்டி வருகிறது. எனினும், அமெரிக்காவும், குலெனும் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக துருக்கியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வரும் அமெரிக்க கிறிஸ்துவ மதபோதகரான ஆண்ட்ரூ பிரன்ஸன் என்பவரை அந்த நாட்டு போலீஸார் கடந்த 2016-ஆம் ஆண்டு கைது செய்தனர்.

குர்து இனத்தவரை கட்டாய மதமாற்றம் செய்ததாகவும், துருக்கி அரசுக்கு எதிராக உளவு வேலைகளைச் செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஆண்ட்ரூ பிரன்ஸனை விடுதலை செய்யாவிட்டால் துருக்கி மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க துணை அதிபர் மைக்கேல் பென்ஸ் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் உலோகப் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை இரட்டிப்பாக்கியுள்ளதாக அதிபர் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இதையடுத்து, துருக்கி பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டு, அந்த நாட்டு கரன்சியான லிராவின் மதிப்பு சரிந்தது.

அதனைத் தொடர்ந்து, பொருளாதாரத் தடைகள் மூலம் தங்கள் நாட்டை அமெரிக்கா மிரட்டுவதாக துருக்கி குற்றம் சாட்டியது.

பொருளாதாரத் தடைகள் மூலம் பிற நாடுகளை மிரட்டிப் பணிய வைக்க நினைக்கும் பழக்கத்திலிருந்து அமெரிக்கா மீண்டு வராவிட்டால், பிற நாடுகளுடன் இணைந்து அமெரிக்காவை வழிக்குக் கொண்டு வரப் போவதாக துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஸரீஃப் எச்சரித்திருந்தார்.

இந்தச் சூழலில்தான், அமெரிக்க மின்னணுப் பொருள்களைப் புறக்கணிப்பதாக எர்டோகன் அறிவித்துள்ளார்.

Related posts: