அமெரிக்க தலையீட்டில் கைச்சாத்தான ஒப்பந்தம்!

Sunday, September 6th, 2020

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் செர்பியா மற்றும் கொசோவோ நாடுகளுக்கு இடையே பொருளாதார ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செர்பியாவின் ஒரு அங்கமாக இருந்த பகுதியான கொசோவோ, 2008ஆம் ஆண்டு செர்பியாவிடம் இருந்து பிரிந்து கொசோவோ தனி நாடாகவும், தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொசோவோவை தனிநாடாக செர்பியா அங்கீகரிக்காமல் இருந்ததுடன், 2013ஆம் ஆண்டு போடப்பட்ட உடன்படிக்கையின் படி கொசோவொவில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அங்கீகரிப்பதாகவும், ஆனாலும் இது தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி பெற்ற மாகாணம் என்றும் சேர்பியா தெரிவித்து வந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தம் கொசோவோ பிரதமர் அவ்துல்லா ஹோதி மற்றும் செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் இடையே நேற்றையதினம் கைசாத்தானது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் முயற்சியால் செர்பியா-கொசோவோ இடையேயான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன் இரு நாடுகளும் பொருளாதார ரீதியிலான பரஸ்பர நடவடிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளன.

இதன்படி, தற்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் மூலம் பல ஆண்டுகளாக நிலவிவரும் செர்பியா-கொசோவோ நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: