அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஒபாமாவின் ஆதரவு ஹிலாரி கிளின்டனுக்கு!
Saturday, June 11th, 2016
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனதாரியான ஹிலாரி கிளின்டனுக்கு உத்தியோகபூர்வமாக ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தொடர்பில் ஹிலாரி கிளின்டனுக்கு எதிராக போட்டியிட்டு வரும் அவரது கட்சியைச் சேர்ந்த பெர்னி சாண்டர்ஸை நேற்றுமன்தினம் வியாழக்கிழமை சந்தித்து உரையாடியதையடுத்தே பராக் ஒபாமா ஹிலாரி கிளின்டனுக்கான தனது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்துக்கு மிகவும் பொருத்தமான தகுதியுடைய ஒருவராக ஹிலாரி கிளின்டன் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதேசமயம் மஸாசுஸெட்ஸ் செனட்சபை உறுப்பினர் எலிஸபெத் வரென்னும் ஹிலாரிக்கான தனது ஆதரவை வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஒருபோதும் வெள்ளை மாளிகையை நெருங்க இடம்கொடுக்காதிருப்பதை உறுதிப்படுத்த, இந்தப் போராட்டத்தில் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஹிலாரி கிளின்டன் வருவதற்கு அவருடன் இதயபூர்வமாக இணைந்து பணியாற்ற நான் தயாராகவுள்ளேன்” என எலிஸபெத் வரென் தெரிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விரைவில் ஹிலாரி கிளின்டனுடன் இணைந்து அவருக்கான தேர்தல் பிரசார நடவடிக்கையில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
எனது நம்பமுடியாத பயணத்தில் ஆரம்பம் முதல் என்னுடன் இருந்தவர்கள், நான் அவருடன் (ஹிலாரியுடன்) இருப்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் என ஹிலாரி கிளின்டனால் டுவிட்டர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சியில் உரையாற்றிய பராக் ஒபாமா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஹிலாரி கிளின்டன் குறிப்பிடுகையில், பராக் ஒபாமாவின் ஆதரவு குறித்து தான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக கூறினார்.
ஹிலாரிக்கு பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து டொனால்ட் டிரம்ப் தெரிவிக்கையில், ஒபாமா இன்னும் 4 வருடங்களுக்கு வேறு எவருக்கும் எதையும் செய்ய இடம்கொடுக்காமல் தான் இதுவரை செய்ததையே செய்ய விரும்புகிறார்” என்று கூறினார்
Related posts:
|
|
|


