அமெரிக்கா – தென் கொரிய இராணுவ பயிற்சி திட்டமிட்டபடி இடம்பெறும்!

Monday, July 22nd, 2019

அமெரிக்கா மற்றும் தென் கொரிய இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் அடுத்த மாதம் நடைபெறும் என தென் கொரிய உயர் மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த பயிற்சியானது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் யூன்னிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக அமையும் என வட கொரியாவினால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார்.

அதேவேளை, இதுபோன்ற இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் இரு நாட்டு இராணுவத்திற்கும் இடையேயான உறவினை மேலும் பலப்படுத்துவதே தவிர, ஏனைய நாடுகளுடனான யுத்த முயற்சி என கருதக்கூடாது என தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் இன் சமாதான திட்டங்களுக்கான ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் திட்டமிடப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கையின் போது, இரு நாடுகளையும் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான துருப்பினர் களத்தில் இறக்கப்பட மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

பதிலாக கணனி மூலம் உருவகப்படுத்தும் அதிநவீன தொழில்நுட்ப முறைமை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் தென் கொரியாவின் நிலைப்பாட்டை முற்றிலும் நிராகரித்துள்ள வட கொரிய வெளிவிவகாரத்துறை அமைச்சின் பேச்சாளர், அமெரிக்க மற்றும் வட கொரிய தலைவர்களுக்கு இடையே அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க ஜனாதிபதி கூட்டு இராணுவ பயிற்சி மேற்கொள்ளப்படாது என உறுதி அளித்ததாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள உத்தேச கூட்டு படை பயிற்சி நடவடிக்கைகள் கடந்த ஆண்டு சிங்கப்பபூரில் கைச்சாத்தான உடன்படிக்கைக்கு முற்றிலும் எதிரானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: