அனைத்து நாடுகளும் கலந்து கொள்ளும் வகையில் உகந்த சூழலை உருவாக்குங்கள் – நேபாளம்!

Thursday, September 29th, 2016

சார்க் நாடுகள் அமைப்பு 1985ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த அமைப்பின் சார்பில் அவ்வப்போது உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. 19வது சார்க் மாநாடு, நேபாள நாட்டின் தலைமைப் பொறுப்பின் கீழ், நவம்பர் மாதம் 9, 10ஆம் திகதி களில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஆயத்த நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

இந்த நிலையில், காஷ்மீர் மாநிலம் உரி இராணுவ முகாமில் கடந்த 18–ஆம் திகதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 18 இராணுவ வீரர்கள் பலியாயினர். தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி அதற்கான தகுந்த ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா அளித்தது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா தற்போது முனைப்பு காட்டி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக நவம்பர் மாதம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நேபாள நாட்டின் தலைமையின் கீழ் நடக்கவிருக்கும் சார்க் உச்சி மாநாட்டை இந்தியா புறக்கணிப்பதாக 2 தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

இந்தியாவின் இந்த முடிவுக்கு தற்போது வலு சேர்ந்து உள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து பூடான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகியவையும் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக நேற்று அறிவித்தன. பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கை காரணமாக சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக இந்த நாடுகளும் தெரிவித்து உள்ளன. இதனால் சார்க் மாநாட்டை புறக்கணிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது.

சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளதால், 2016 ஆம் ஆண்டுக்கான சார்க் மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக மாநாட்டுக்கு தலைமை வகிக்கும் நேபாளம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே நேற்று இரவு நேபாள வெளியுறவுத்துறை மந்திரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சார்க் மாநாட்டில் அனைத்து நாடுகளும் கலந்து கொள்ளும் வகையில் உகந்த சூழலை உருவாக்க வேண்டும்  என்று தெரிவித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Related posts: