அதிகரிக்கும் கொரோனா: முடங்கிய பிரான்ஸ்!

Thursday, April 1st, 2021

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா வைரசின் 3-வது அலை வேகமாக தாக்கி வருகின்றது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 42 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரான், நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்துள்ளார்.
பிரான்சில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களும் 3 வாரங்களுக்கு மூடப்படுவதாக அறிவித்த இமானுவேல் மக்ரான், “ தற்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் கட்டுப்பாட்டை இழந்து விடுவோம். தடுப்பூசி போடுவதே சிறந்த தீர்வாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மே மாதம் நடுப்பகுதியில் நாடு சகஜ நிலை திரும்பும் என நம்புவதாகவும் இமானுவேல் மக்ரான் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் படி, பகல் நேரத்தில் மக்கள் 10 கி.மீட்டர் சுற்றளவு மட்டுமே செல்ல முடியும். அதற்கு மேல் செல்ல வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: