அச்சுறுத்தல் இல்லாவிடின் அணு ஆயுத தாக்குதல் நடத்த மாட்டோம் – வடகொரிய

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை கண்டுகொள்ளாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இதன்காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
அங்கு 5-வது முறையாக அணுகுண்டு சோதனை எந்த நேரத்திலும் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில், தலைநகர் பியாங்யாங்கில் ஆளும் தொழிலாளர் கட்சி மாநாடு நடந்தது. இந்த மாநாடு 36 ஆண்டுகளில் முதல் முறையாக இப்போதுதான் நடந்துள்ளது.
இந்த மாநாட்டில், அந்த நாட்டின் தலைவரான கிம் ஜாங் அன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “மற்ற நாடுகளால் (தென்கொரியா மற்றும் அமெரிக்கா) வடகொரியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வரையில் நாங்களாக அணு ஆயுத தாக்குதல் நடத்த மாட்டோம். ஆயுதப்பரவலுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையின்படி நாங்கள் நடப்போம். உலகளவில் அணு ஆயுதமில்லாத நிலையை ஏற்படுத்த கடுமையாக முயற்சிப்போம்” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “தென்கொரியாவுடனான நம்பிக்கையின்மை, புரிந்துகொள்ளாமை அகற்றப்படவேண்டும். அந்த நாட்டுடனான உறவு வலுப்பட வேண்டும்” என்றும் கூறினார். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கான 5 ஆண்டு திட்டம் பற்றியும் கிம் ஜாங் அன் பேசினார்.
Related posts:
|
|