அகதிகள் படகு கவிழ்ந்து நூற்றுக்கணக்கானோர் பலி?

Tuesday, April 19th, 2016

கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து ஐரோப்பாவில் குடியேறும் நோக்கில் மத்திய தரைக்கடல் வழியாக பயணித்த நூற்றுக்கணக்கானவர்கள் மூழ்கியுள்ளதாக, மீட்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நாற்பதுக்கும் அதிகமான கிழக்கு ஆப்ரிக்கர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தங்களுடன் பயணிக்க ஆரம்பித்தவர்களின் படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்ததில் ஏராளமானோர் மூழ்கினர் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கிரேக்கத்தின் கலமாட்டா பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்கள், தாங்கள் லிபியாவிலிருந்து புறப்பட்டனர் எனவும், நடுக்கடலில் ஆட்கடத்தல்காரர்கள் தம்மை வேறொரு படகுக்கு மாறும்படி கூறினர் எனவும் கூறினர். அப்படி மாற்றி ஏற்றப்பட்ட படகில் ஏற்கனவே 300 அகதிகள் இருந்தனர் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அந்தப் படகு நள்ளிரவில் கவிழ்ந்தது என மீட்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகளால் இந்த உயிரிழப்புகளை உறுதிசெய்ய முடியவில்லை. எனினும் இந்தத் தகவல் உறுதியாகும் பட்சத்தில், இது குடியேறிகள் நெருக்கடி விவகாரத்தில், நடுக்கடலில் நடந்த துயர சம்பவங்களில் மிகவும் மோசமானதாக இருக்கும் என நோக்கப்படுகின்றது.

Related posts: