T-20 உலக கிண்ணம்: அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!

Wednesday, March 23rd, 2016

டி20 உலக கிண்ணத்தின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மொகாலியில் நேற்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடுவதை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து மார்டின் குப்திலும், அணி தலைவர் வில்லியம்ஸனும் ஆரம்ப ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள்.

கப்தில் அதிரடி காட்ட வில்லியம்ஸன் நிதானமாக விளையாடினார். கப்தில் அதிரடியால் நியூசிலாந்து 6 ஓவர் முடிவில் 58 ஓட்டங்களை குவித்தது.

இந்நிலையில் வில்லியம்ஸன் 17 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய முன்றோ, ஆண்டர்ஸன், ரோன்ஞ் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் 40 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரி உட்பட 80 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கப்திலும் ஆட்டமிழந்தார்.

இதனால் நியூசிலாந்து அணி அதிக ஓட்டங்களை குவிக்க முடியாமல் திணறியது.

இறுதிகட்டத்தில் ராஸ் டெய்லர் அதிரடி காட்ட நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களை குவித்தது.

பாகிஸ்தான் தரப்பில் முகமது சமி மற்றும் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 181 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷர்ஜீல் கான் மற்றும் அகமது சேஷாத் களமிறங்கினர்.

இருவரும் பொறுப்புடன் விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர்.

இந்நிலையில் 9 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 47 ஓட்டங்கள் அடித்த நிலையில் ஷர்ஜீல் கான் ஆட்டமிழந்தார்.

அப்போது பாகிஸ்தான் 5.3 ஓவர்களில் 65 ஓட்டங்களை எடுத்திருந்தது. சிறிது நேரத்தில் சேஷாத்தும் 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

எனினும் பின்னால் வந்த வீரர்கள் சொதப்பியதால் அந்த அணி தடுமாற தொடங்கியது. உமர் அக்மல் 24 ஓட்டங்களிலும் அப்ரிடி 19 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 158 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் நியூசிலாந்து அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் அரை இறுதிக்கும் அணி அந்த தகுதி பெற்றுள்ளது

Related posts: