T-20உலகக் கோப்பை: இந்தியாவை பந்தாடியது மேற்கிந்திய தீவு

Friday, April 1st, 2016

டி20 உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் இந்திய அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை தெரிவு செய்தது. இந்தியாவின் சார்பில் ரோகித் சர்மா மற்றும் ரகானே ஆரம்ப வீர்ர்களாக களமிறங்கினர்.

இருவரும் மேற்கிந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை சாமர்த்தியமாக ஆடினார். இந்நிலையில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகள் உட்பட 43 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரோகித் ஆட்டமிழந்தார். பின்னர் ரகானேவுடன் கோஹ்லி இணைந்தார்.

முதலில் நிதானமாக ஆடிய கோஹ்லி பின்னர் தனது அதிரடியை காட்டினார். ரகானே அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இந்நிலையில் 2 பவுண்டரி உட்பட 40 ஓட்டங்கள் எடுத்த ரகானே சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு தனது விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து டோனி களமிறங்கினார். மறுமுனையில் அரைசதத்தை நிறைவு செய்த கோஹ்லி மேற்கிந்திய பந்து வீச்சாளர்களின் பந்தை நாலாப்பக்கமும் விரட்டினார். இதனால் அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு இந்தியா 192 ஓட்டங்களை குவித்தது.

193 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மேற்கிந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே பேரதிர்ச்சி காத்திருந்த்து. இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்ல் 6 பந்துகளை மட்டுமே சந்தித்திருந்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் 5 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து அந்த அணியினருக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதனையடுத்து சார்லசுடன் சேர்ந்த சாமுவேல்ஸ் 7 பந்துகளில் 8 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் நெஹ்ரா பந்து வீச்சில் ரஹானேவிடம் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார்.

ஒருபக்கம் விக்கெட்டுகளை தொடர்ந்து பறிக்கொடுத்தாலும் நிதானத்தை இழக்காமல் ஆரம்ப வீரராக களமிறங்கிய சார்லஸ் தனது பாணியில் ஓட்டங்களை குவித்துக் கொண்டிருந்தார்.13 ஓவர்கள் கடந்திருந்த நிலையில் விராட் கோஹ்லி பந்து வீச வந்தார். தனது முதல் பந்திலேயே 52 ஓட்டங்கள் குவித்திருந்த சார்லஸ் விக்கெட்டினை பறித்தார்.

இதனையடுத்து 36 பந்துகளில் 50 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்த சிம்மன்சுடன் றஸ்ஸல் இணைந்தார்.இருவரும் இணைந்து  இந்திய அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை நாலாபக்கமும் விளாசித்தள்ளி இந்திய அணியினரை நிலைகுலைய வைத்தனர்.

நிதானமாக ஆடிய மேற்கிந்திய அணி 19.4 ஓவரில் 196 ஓட்டங்களை எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. போட்டியின் நாயகனாக சிம்மன்ஸ் தெரிவானார். மேற்கிந்திய தீவுகள் அணியில் காயமடைந்த பிலேட்சருக்குப் பதிலாக லேண்டில் சிம்மன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டிரந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts: