T–20 உலகக்கிண்ணய் இறுதிப்போட்டியில் இங்கிலாந்துடன் மோதும் அணி எது?

Thursday, March 31st, 2016

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட்டின் 2 ஆவது அரைஇறுதியில் இந்தியா – மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் இன்று மோதுகின்றன.

20 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் இரண்டாவது அரைஇறுதியில் முதலாம் பிரிவில் முதலிடத்தை பிடித்த மேற்கிந்தியத்தீவுகள் அணியும், இரண்டாம் பிரிவில் 2 ஆவது இடத்தை பெற்ற இந்தியாவும் களத்தில் இறங்குகின்றன.

2007 ஆம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. பிறகு எழுச்சி கண்ட இந்திய அணி, பாகிஸ்தான், பங்களாஷே் மற்றும் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து அரையிறுதியை எட்டியுள்ளது.

இதுவரை 184 ஓட்டங்கள் சேர்த்துள்ள சிறந்த துடுப்பாட்ட வீரரான கோஹ்லியை தவிர்த்து இந்திய அணியில் வேறு எவரும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது கவலைக்குரிய அம்சமாகும். இந்த ஆட்டத்திலும் இந்திய அணி கோஹ்லியின் பங்களிப்பைத்தான் பெரிதும் சார்ந்து இருக்கின்றது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (4 ஆட்டத்தில் 45 ஓட்டங்கள்), ஷிகர் தவான் (43 ஓட்டங்கள்) ஆகியோரின் துடுப்பாட்டம் சிறப்பானதாக அமையவில்லை. சுப்பர்-10 சுற்றில் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் இந்திய அணியின் சராசரி 5.66 ஓட்டங்களே.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது யுவராஜ்சிங் இடது கணுக்காலில் காயமடைந்தார். காயத்துடன் அரைமணி நேரம் போராடிய யுவராஜ்சிங், எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது அணிக்கு சற்று பின்னடைவாகும். அவருக்கு பதிலாக மனிஷ் பாண்டே சேர்க்கப்பட்டிருப்பதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அணியில் பாண்டே சேர்க்கப்பட்டாலும் அனேகமாக அனுபவ வீரர் ரஹானேவுக்கு தான் களம் காண வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகின்றது.

2012 ஆம் ஆண்டு சம்பியனான மேற்கிந்தியத்தீவுகள் சுப்பர்-10 சுற்றில் இங்கிலாந்து, தென்ஆபிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளை பதம் பார்த்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சம்பிரதாய மோதலில் மேற்கிந்தியத்தீவுகள் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. என்றாலும் அந்த அணி துவண்டு போய் விடவில்லை. தசைப்பிடிப்பால் அவதிப்படும் பிளட்சருக்கு பதிலாக லென்டல் சிமோன்ஸ் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணியில் அதிரடி வீரர்களுக்க பஞ்சம் கிடையாது. ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ், டரன் சேமி, டுவெய்ன் பிராவோ, ரஸெல் அதிரடியில் வெளுத்து கட்டக்கூடியவர்கள். குறிப்பாக கெய்ல், சற்று நேரம் நிலைத்து நின்று ஆடும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி கேள்விக்குறி.

இங்கிலாந்துக்கு எதிராக இதே மைதானத்தில் கெய்ல் 11 ஆறு ஓட்டங்களுடன் 100 ஓட்டங்களை குவித்தார். அத்துடன் மேலும் 2 ஆறு ஓட்டங்களை அடித்தால், டி20 போட்டிகளில் 100 ஆறு ஓட்டங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை கெய்ல் படைத்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெய்ல், அஸ்வினின் பந்து வீச்சில் 4 முறை (9 இனிங்ஸில்) ஆட்டமிழந்திருக்கிறார். அஸ்வினின் ஓவர்களில் 70 பந்துகளை சந்தித்து 57 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அதனால் கெய்லின் ஆதிக்கத்தை அஸ்வினின் சுழல் அடக்குமா? என்ற ஆவல் எழுந்துள்ளது.

மும்பை வான்கடே மைதானம் ‘ஓட்டமழை’க்கு பெயர் பெற்றது. முன்னைய ஆட்டங்களுடன் ஒப்பிடும்போது இந்த மோதலுக்கு பயன்படுத்தப் படும் ஆடுகளத்தின் தன்மை கொஞ்சம் வேகம் குறைந்து இருக்கலாம். ஆனாலும் துடுப்பாட்டவீரர்களின் ஜாலமே மேலோங்கி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் களத்தில் எந்த அணி நெருக்கடியை திறம்பட கையாள்கிறதோ அந்த அணியெ வெற்றி பெறும்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரே அணியில் கைகோர்த்த கெய்ல்-கோஹ்லி, தோனி – பிராவோ இன்று களத்தில், நேருக்கு நேர் ஆக்ரோஷமாக யுத்தம் நடத்த ஆயத்தமாகி வருவதால் போட்டியில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

20 ஓவர் உலகக்கிண்ணத்தில் இந்திய அணி அரைஇறுதியில் (2007 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவையும், 2014 ஆம் ஆண்டில் தென்ஆபிரிக்காவையும் வென்றது) தோற்றதில்லை. அந்த பெருமையை தக்க வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related posts: