FIFA தொடர் ; அரையிறுதிக்கு செல்லும் அணிகள்!

Monday, July 9th, 2018

பிபா உலக கிண்ணத் தொடரின் கடைசி காலிறுதி போட்டிகள் இரண்டிலிருந்தும் குரோஷியா மற்றும் இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

பிபா தொடரை நடாத்தும் ரஷ்யா அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று (07) இடம்பெற்ற காலிறுதிப் போட்டிகளில் ஸ்வீடன் – இங்கிலாந்து மற்றும் ரஷ்யா – குரோஷியா ஆகிய அணிகள் மோதிக் கொண்டன.

நேற்றைய முதல் போட்டியில் ஸ்வீடன் – இங்கிலாந்து அணிகள் விளையாடின, இதில் முதல் பாதியில் இங்கிலாந்து அணி முதலாவது கோலை (30′) அடித்ததோடு, இரண்டாம் பாதியில் மற்றொரு கோலை (58′) அடித்ததன் மூலம் 2 – 0 என இங்கிலாந்து அணி, இலகுவான வெற்றியை பெற்றது.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ரஷ்யா – குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டி இரு மணித்தியாலங்களுக்கு மேலாக நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோலை அடித்தன. முதலாவது கோலை ரஷ்யா (31′) அடித்ததைத் தொடர்ந்து, குரோஷியாவும் பதிலுக்கு ஒரு கோலை (39′) அடித்தது. 1 – 1 என முதல் பாதி நிறைவடைந்தது.

இதனையடுத்து இரண்டாம் பாதியில் இரு அணிகளும் எவ்வித கோலையும் அடிக்காத நிலையில், மேலதிக நேரமாக 6 நிமிடங்கள் (90+6′) வழங்கப்பட்ட நிலையில் போட்டியின் 100 ஆவது நிமிடத்தில் குரோஷியா இரண்டாவது கோலை அடித்தது. இதனையடுத்து, மைதானமே அமைதியடைந்தது.

இதனையடுத்து, உலக கிண்ணத்தை நடாத்தும் ரஷ்யாவுக்கு சலுகையாக மேலதிக நேரம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது. இதனையடுத்து போட்டியின் 115 ஆவது நிமிடத்தில், ரஷ்யாவின் கோலுக்கான எல்லைக்குள் (Russia Box) குரோஷிய வீரரின் கையில் பந்து பட்டதை அடுத்து, அவருக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டதோடு, ரஷ்யாவுக்கு ப்ரீ-கிக் (Free-kick) வாய்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வாய்ப்பை பயன்படுத்திய ரஷ்யா லாவமாக ஒரு கோலை அடித்தது. இரண்டு நிமிடங்களுக்கும் மேலாக (120+2′) நீடித்த குறித்த போட்டி 2 – 2 என நிறைவடைந்ததை அடுத்து, பெனால்டி முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.

முதலாவது கோலை அடிக்கும் வாய்ப்பை ரஷ்யா பெற்ற போதும், முதல் கோலை குரோஷிய கோல் காப்பாளார் சிறப்பாக தடுத்தார். (0-0)

இதனைத் தொடர்ந்து குரோஷியா முதலாவது கோலை அடித்தது. இவ்வாறு முதலாவது மற்றும் மூன்றாவது கோலை அடிக்கும் வாய்ப்பை ரஷ்யா இழந்ததோடு, குரோஷியா அடித்த இரண்டாவது கோல் மாத்திரம்  கோல் காப்பாளரால் தடுக்கப்பட்டது.

அதற்கமைய ரஷ்யாவை பெனால்டி முறை மூலம் 4 – 3 என வென்ற குரோஷியா அரையிறுதிக்கு தெரிவானது.

அதன் அடிப்படையில், தற்போது பிரான்ஸ் – பெல்ஜியம், குரோஷியா – இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

அரையிறுதிப்போட்டியின் முதலாவது போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (10) பிரான்ஸ் – பெல்ஜியம் அணிகளுக்கிடையிலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி புதன்கிழமை (11) குரோஷியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தொடரின் மூன்றாம் இடத்தை பிடிக்கும் அணிக்கான போட்டி எதிர்வரும் சனிக்கிழமையும் (14) இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமையும் (15) இடம்பெறவுள்ளன.

Related posts: